கொட்டியாபுரத்துக் குமுறல்;
திருமலை மண்சுமக்கும்
திருக் கொட்டியார் புரமென்ற
இருள் சூழாப் புதுமண்ணில்
இன்பக் கவிநடை நான் போட்டு
துன்பச் சுமை நீக்கும் அன்னைதான்
கொட்டியாபுர மண்ணம்மா,
கொட்டியாரமே நீ
கொட்டிவிட்ட முத்துக்களெல்லாம்
பச்சைப் பசும் தரையில்
பவனிவந்த காரணத்தால்
முத்தூராய் நீ மாறி
மூதூராய் வாழுகின்றாய்,
தமிழின் இனிமை கொண்டு
தமிழே உயிராய் வாழ்ந்து
இழிவைத் தொடாத மனிதர்களாய்
வாழ்ந்துவிட்ட உறவுகளை
வாழவைத்த பூமிதான்
கொட்டியார் புரமம்மா
கொட்டியா புரத் தமிழன்
கெட்டியாய் வாழ்ந்த காரணத்தால்
பட்டி தொட்டி யெங்கும்
பட்டினி இல்லாமல் தினம்
வாழ்ந்த கதைப் பதிவு
கொட்டியார் புரத்திலுண்டு
புதுமையும் செழுமையும் கொண்ட
புத்தொளிp படைத்த கொட்டியாரம்
பொலிவுடன் பசுமை யிழந்து
நலிந்த கதையைக் கூற
நெஞ்சம் வெடித்து
நெருப்பாய் எரியுதம்மா
முடியாத ராகத்தை
இசைக்கத் துடித்த மனசு
புடிந்த சோக முகாரியை
மீட்டு உளம் வாடுதம்மா
வானுயர் புகழ் படைத்த
கொட்டியாரமே நீ
வாழ்விழந்து போன கதை
வரலாற்றுப் பதிவுகளாய்
இணையத்தளங்கள் சுமக்கும்
இரங்கல் கதைகளாய் ஆனதம்மா,
வேரொடு ஊரிழந்து
வெறுமை மனிதர்களாய்
பாரொடு சொந்தமான
ஊமை அகதிகளாய்
கொட்டியாரமே உன் மனிதம்
சாக்கடைக்குள் மடியலாமா?
கட்டிப் புரண்டு
தவழ்ந்து விளையாடி
புழுதிப் படுக்கையில்
புனைந்த கவிமாலை
எட்டாத் தூரம் சென்று
தேம்பித்துடிக்கும் உள்ளங்கள்
மீண்டும் கொட்டியா புரமடியில்
தவழ்ந்து விளையாட
கிடைக்குமா காலமொன்று.
ப.மதிபாலசிங்கம்
4ஆம் வட்டாரம்,
ஈச்சிலம்பற்று,
மூதூர்
No comments:
Post a Comment