Monday, 25 October 2010

சிதைவுகளில் இருந்து சிறகு முளைத்தல்

சிதைவுகளில் இருந்து சிறகு முளைத்தல்


வயிற்றில் கரு சூல் கொள்ளாது

கர்ப்பம் சிதைந்து

அடிக்கடி கட்டி விழுந்து

துவாலை இறைத்து

நம்பிக்கை இழந்து கிடக்கும்

ஒரு தாயின் கர்ப்பப் பைக்குள்

நாற்றம் எடுத்துக்கிடக்கும்

சிறு இரத்ததுண்டத்தில் இருந்து

கை கால் வீசி எழுகிறேன் நான்......

தொப்புள் கொடி

கீளே இழுபட்டு வர

தூர நடக்கிறேன் துணிச்சலுடன்……….

அக்கினிகள் சூழ்ந்து கொண்டிருக்கும்

என் காலத்துள் வாழ

நானும் ஒரு அக்கினிப் பந்தாய்

உருண்டு திரிகிறேன்

விலங்காயும் பறவையாயும் மனிதனாயும்

அங்கங்கள் விரிய

முகத்தில்ஆண் குறியைத் தரித்துக் கொண்டு

தலையில் வால் முளைத்து

அலைகிறது என் உயிர் பிண்டம்

நெருப்பை சப்பி

கரியைப் பீய்ச்சியும்

தாகம் அடங்காது

எங்கும் எதிரொலிக்கிறது

என் ஆண்மாவின் குரல்………!


முகத்தில் இருக்கும்

என் ஆண் குறியில்

யோனியைப் பொருத்தி

என்னைப் பிரதி செய்யுங்கள்

ஓன்றாய்……..நூறாய்……ஆயிரமாய்……..

அதன் பின் எந்தக்கரம்

என் குரல் வளையை நெரித்து

தலையில் மலம் கழிக்கிறது பார்க்கிறேன்…….

நான் கர்ப்பம் தரித்த தாயும்

அவள் கர்ப்பப் பையும் மட்டுமே

நம்பிக்கை இழந்தவை

சூல் சிதைந்து

நாற்றமெடுத்துக் கிடந்த

இரத்தப் பிண்டத்தில் இருந்து

கை கால் வீசி எழுந்தவன் நான


சுஜந்தன்

Thursday, 21 October 2010

என் காதலே

 
 

பெண்னே உன் உதடு வேன்டுமானால் என்னுடன்
பேசியிருக்கலாம் ஓர் ஆயிரம் வார்த்தைகள்
உன் உழ்ளம் பெசுமா ஓர் வார்த்தை i love you....
என்ற அந்த ஓர் வார்த்தை அதைக் கேட்டாலே
மரணித்துக் கோன்டிருக்கும்..என் உடல் கூட
...உனக்காய் மீண்டும் உயீர்த்தேளும்
பெண்ணே

காதல் என்னும் கவியெழுதி
என் மனதை களவாடி
செற்கள் என்னும் முட்களினால்
குத்தியென்னைக் காயப்படுத்தி
இதையமதில் உதிரம் கசிய முள் நடுவே
...சிறை வைத்து எங்கே நீ.
சென்றாயோ...? பூ வே.

மலரே உந்தன் உள்ளத்தில் முட்கள் இருந்தால்
அதை உடனே அகற்றி விடு ஏன் என்றால்
நீ இன்று முதல் வாழப்போகும் இடம்
புதர்கள் நிறைந்த காடல்ல ..பூங்காவனம்....
பூங்காவனத்து பூக்களுக்கு முட்கள் தேவையில்லை
...பூவின் உன்னத மென்மையே போதுமானது
பூ வே..

காதலே நான் உன்னை மட்டும் நேசிக்கிறேன்
என் காதலியே உன் முகமறியாமல் உன்னையும் நேசிக்கின்றேன்
என் தேவதையே உன் குரல் மட்டும் சங்கீத ஸ்வரங்களாய்
என் காதினில் எப்போதும் கேட்கின்றது
என் ஒருதலைக் காதலை உண்னிடம் சொன்னால்
...அது மறுகனம் இருதலைக் காதலாகுமோ..?
என் காதலே

உன் கரு விழிகழ் கதைப்பது என்ன வேன்று
தினமும் என் காத்திருப்பேல்லாம் உன்
வருகைக்காகத்தான்
இது தெரியும் உனக்கு
ஆனால் தெரியாதவள் போல் பொய்
...விடுவாய் அது புரியும் எனக்கு ஆனால்
புரியாத புதிராய் நான் இருப்பேன்
இங்கே சரி தானே

 ஜீவகுமார்-கட்டைபறிச்சான்

Monday, 18 October 2010

நாயாக மட்டுமே இருப்பதன் சாத்தியம்

நாயாக மட்டுமே இருப்பதன் சாத்தியம்

by Sampur Vathanaruban on 18 அக்டோபர் 2010, 13:37 க்கு

கதவோரம் தாழ்வாரம் அடுப்படிச் சாம்பல் மேடு.. என
சுருண்டு கிடந்த நாய்கள்
ஒன்றாய்க் கூடி குமைந்து கிடந்தன

ஒன்றைச் சினைப்படுத்த..

தமக்குள் தாமே தம்மை முறைத்தும்
தமக்குள்ளே தம்மையே கடித்தும்
ஒன்றை ஒன்று விரட்டியும் முந்தியடித்தும்
முதன்மைப்படவும் முதலில் ஏறவும்

போராடுவது போலவும் போட்டியிடுவதாகவும்
தமது உரிமையை விடாது தாமே காப்பதாகவும்
அதற்காய்

முழுவதையும் இழந்தாயினும் புணர்வது
எனவும் போல
தம்மையே முறைத்தும் கடித்தும் விரட்டியும்
குறிகள் விறைத்து குமையும்
ஒன்றையே புணர.

சினைக்குள் சாத்தியம்
நிமிர்ந்த வாலுடனோ சுருளும் விதமாகவோ
குரைக்கக் கூடியதாகவோ
உறுமிக் கடிக்கத் தக்கதாகவோ
வேட்டைத் தனத்தோடோ வெகுளியாகவோ
சில நாய்கள்.

நாயாக மட்டுமே இருப்பது சாத்தியம்.

இனியவை விரும்புவதும் ஏற்பதுவும்
எவரும்
பல்லிடுக்கிலிருந்து கிளறி துப்பும்
எச்சில் இறைச்சித் துண்டாயிருக்கலாம்.

ஏப்பங்களின் பின்னாக தூக்கிப் போடும்
எலும்பு மீதமாக இருக்கலாம்.

இந்த நாய்கள் காத்திருக்கும்.

சொச்E u7RY Bi

Thursday, 14 October 2010

மீனவர் பாடல்

ஏலே ஏலே ஐலசா ஏலே ஏலே
ஏலே ஏலே ஐலசா ஏலே ஏலே
அரசடிபிள்ளையாரே  ஏலே ஏலெ
ஆரய்யா எங்களுக்கு ஏலெ ஏலே

பார வலையிருக்குஏலே ஏலே
பார்க்க கடலிருக்கு ஏலே ஏலே
சூர வளைந்து வரும் ஏலே ஏலே
பாரயும் சேர்ந்து வரும் ஏலே ஏலே

அப்பன் எங்கு போனான் ஏலே ஏலே-அவன்
ஆழ்கடல் தேடிப்போனான் ஏலே ஏலே
போனவனக் காணல்ல ஏலே ஏலே
போக்கிடம் ஏதுமில்ல ஏலே ஏலே

மழையும் வருகுதல்லே ஏலே ஏலெ-அடி
மடியயையும் காணல்லையே ஏலே ஏலே
நேரம் போகுதல்லே ஏலே ஏலெ
நிறைய மீனும் வரும் ஏலே ஏலே

விளையாட்டும் வேடிக்கையுமான பாடல்கள்

1இஞ்சிக்கு ஏலம்கொண்டாட்டம்
அந்த எலும்பிச்சம்பழத்திற்கு புளிப்புக்கொண்டாட்டம்
கஞ்சிக்கு களனி கொண்டாட்டம்
அந்தக்கடை செட்டமூளிக்குக் கோபம்கொண்டாட்டம்.

2ஆக்காண்டி ஆக்காண்டி எங்கெங்கமுட்டை வைத்தாய்
கல்லைபிளந்து கடலருகேமுட்டைவைத்தேன்
வைத்ததுமோ மூண்டுமுட்டை பொரித்ததுமோ ரெண்டுகுஞ்சு
மூத்தகுஞ்சுக்கிரைதேடி மூனுமலைசுற்றிவந்தேன்.
இளையகுஞ்சுக்கு இரைதேடி ஏழமலைசுற்றிவந்தேன்
நான் அழுத கண்ணீரும் என் குஞ்சழுத கண்ணீரும்
இஞ்சிகு பாய்ந்து இலாமிச்சைக்கு வேரூண்டி
வாய்க்கால் வழியே வரம்போடு போகுதணே
3
ஆலையிலே சோலையிலே
ஆலம்பாடிச் சந்தையிலே
கிட்டிப்புள்ளும் பம்பரமும்
கிறுகிஅடிக்கப் பாலாறுபாலாறு.
4
ஈக்கல ஈக்கல தும்பல தும்பல
பாக்குபறிக்கிற வண்ணா ஓல
மூங்கிலோல முதிரம் குத்தி
வேட்டவாளி பட்டனம்
பட்டனம்   பட்டனம் பட்டனம்
5
அரப்பரப்பு தட்டி
அரியமாங்க சோறாக்கி
பருப்பும் பருப்பும் பன்னிரண்டாம்
பறயனக்குத்தி தாட்ட இடத்த
கொண்டப்பெருமாள் செத்த இடத்த
கோடாலி அம்மா கால் வாங்கு
6
கிள்ளு கிள்ளுப் பிராண்டி
கீயா மாயா பிராண்டி
நொள்ளு நொள்ளு பிராண்டி
நோயா மாயா பிராண்டி
உங்கப்பன் தலையில என்ன பூ
முருங்க பூ
முருங்க பூ திண்டவளே
முன்னாடி எண்ண குடிச்சவளே
பாதி விழாங்கா திண்டவளே
பஞ்சவர்ணக் கைய முடக்கு.

கவி மரபுப் படல்கள்

1.வாழைப் பழமேஎன்ர
வலதுகையிற் சர்க்கரையே.
ஏலக் கிராம்பேஉன்னை
என்னசொல்லி கூப்பிடட்டும்.

  2.மாமி மகளேஎன்ர
மருதங்கிளி வங்கிசமே
ஏலங் கிராம்போ உன்னை
என்னசொல்லி கூப்பிடட்டும்.

  3.வாய்பழமே என்ர
வலதுகையிற் சர்கரையே
உள்ளங்கைத் தேனே- நான்
உருகிறண்டி உன்னாலே.

  4.ஒண்;டுக்கு மில்லகிளி
உன்னைநான் விரும்புறது
சங்குச் சட்டைக்கும்- உன்ர
சரிஞ்சநல்ல தேமலுக்கும்.

5. பொடுபொடென்ற மழைத்தூற்றல்
பூங்கார மானநிலா
சுடமிருட்டு மாலைவெள்ளி- நீ
கதவுதிற கண்மணியே.

6. வங்காளம் போறனென்று
மனக்கவலை வையாதே
சிங்காரக் கொண்டைக்கு-இரண்டு
சின்னச்சீப்பு வாங்கிவாறன்.

7. கொச்சிப் பழத்தைக்
குறுக்கால வெட்டினாற்போல்
பச்சவடச்சேலை- உன்ர
பால்முலைக்கு எற்றதுதான்.

8. சாயக்கொண்டை கட்டுறதும்
சளிக்கஎண்னை பூசுறதும்
ஏவிஏவி நடக்கிறதும் -எந்த
இளந்தாரிக்கு வாழவென்றோ.

9. ஓமணாப் பொண்டுகளே
உசந்தகொண்டைக் காறிகளே
மன்னாரான் வாறானென்று
வழிமறிச்சி நில்லாதீங்க.

10. கண்டி கொழும்புமில்லை
கண்காணா இடமுமில்லை
கீழக் கரையுமில்லை- உங்க
கிளி இருந்து போகிறது

கொம்பு விளையாட்டுப் பாடல்கள்

கொம்பு விளையாட்டுப் பாடல்கள்

1. கோலாப்பணிச்சோலை கொய்துடுத்துக்
கோம்புவிளையாட்டுக்குப்போகையிலே
வேலப்பர் வந்துமடிபிடித்து
மேத்தவுஞ்சிக்கொண்டார்தோழி.

2. காப்பணிமங்கையார் மன்மதவேள்
கந்தன் குமரன் அருள்வேலன்
சீப்புடன் மல்லிகைப்பூ மாலைதந்து
சேர்வமென்றாடி தோழியரே.

வேறு

3. தோழியொரு வசனம்
சொல்கிறேன் கேளடிநாற்றோழி
வாளி தந்தென்னையும் மேயிங்கு
வரச்சொன்னாரடி மானாரே.

4. மஞ்சள்குரவிபோல மடிநிறைந்தோர் மல்லிகைப்பூ
சிந்தித் தெருவில்வாற சிறுக்கனல்லோடி தென்சேரியான்.

5. முலைகுறத்திக்கு மையல்கொண்டு
மணிப்பவளம் வளையல்விற்றுத்
தினைப்புணத்திலே கண்டவுடன் கந்தர்
வேங்கைமரமானார் தோழியரே

6. ஆற்றோறம் போறமயில்
ஆண்மையிலோ அதுபெண்மயிலோ
பார்த்துவாடா வடசேரியாhன்
பாhவற்பழம்போல மாலைதாறேன்.

7. ஆற்றோரம் சிறாம்பிகட்டி
ஆங்குநின்று படைபொருது
வேர்த்துவாறான் வடசேரியான்- நல்ல
வெள்ளி மடல்கொண்டுவீசுங்கடி


8. ஆற்றோரம் சிறாம்பிகட்டி
ஆங்குநின்று பனைபொருது
தேர்ற்றுவாறான் வடசேரியான்
துடைப்பங்கட்டா வடியுங்கடி.

9. வடசேரியான் கொம்பு எங்கேஎங்கே
மணமுள்ளதாளையின் மேலேமேலே
தென்சேரியான் கொம்பு எங்கேஎங்கே
செம்பரப்பற்றைக்கு உள்ளேஉள்ளே.

10. தென்சேரியான் கொம்பு எங்கேஎங்கே
சித்திரத்தேருக்கு மேலேமேலே
வடசேரியான் கொம்பு எங்கேஎங்கே
வண்ணாண்டசாடிக்கு உள்ளேஉள்ளே

11. தவிட்டங்காயான் தென்சேரியான்
தன்மானம்சற்றும் இல்லாண்டி
அவிட்டுத்தலைப்பாகை கையில்எடுத்து
அஞ்சிஅதோஓடிப்போறாண்டி

12. வாழைக்காயான் வடசேரியான்
மானஈனம் கெட்டவண்டி
பெண்பிள்ளைப்பேச்சுக்கு ஆற்றாமலே அவன்
பேரழிந்தே வெட்கிப்போறாண்டி

13. பால்போல் நிலவெறிக்கப்
படலைத்திறந்தவன் ஆர்தோழி
நான் தான்டி வடசேரியான்
உனக்கு நாழிப்பணம் கொண்டுலாவுகின்றேன்

14. மலையோரம் வேட்டைக்குப்போய்
மானடி பார்த்துவருகையிலே
கலையோ கலைமானோ
காடேறிமேய்ந்ததோர் பெண்மானோ

15. புல்லாந்திப் பற்றைக்குள்ளே
புலிகிடந்து உறுமுகுது
ஒக்கமதிப்பாய் புல்லாந்தி
ஒருகுத்தாய்க்குத்தாய் புல்லாந்தி.

16. கப்புகனார்நிதம் அர்ச்சனைசெய்ய
கரிமிசைவாறவர் ஆர்தோழி
செப்புமுலைக்குறத்தி பங்கன்- அந்தச்
செவ்வேல்முரகனடிமானே

உழவுப் பாட்டு

1. சார்பாந்த கள்ளனடா-செல்வன்
தாய்வார்த்தைகேளான்டா

2. பாரக்கலப்பையடா செல்வனுக்கு
பாரமெத்த தோனுதடா.

3. வரம்போ தலைகாணி- செல்வனுக்கு
வாய்காலோ பஞ்சுமெத்தை

4. செல்லன் நடந்தநடைஇன்று
சொல்லவெண்ணா அன்னநடை

5. இந்தநடைதானோ- செல்வனுக்கு
இன்னுமுன்டோ அன்னநநை

6. இந்தநடை நடந்து- செல்லாநாம்
எப்போகரை சேர்வமடா.

7. வெள்ளிமதியானி செல்வனுக்கு
வென்கலத்தால் சுள்ளாணி.

8. வெள்ளியினாற் சுள்ளாணி -என்தம்பிசெல்வா
ஊந்தனுக்கு வென்கலத்தால் மதியாணி.

9. சுள்ளாணிக்குள்ளே- செல்லாஒரு
சூத்திரத்தை வைத்தான்டா

மறுக்கப்பட்ட நியாயங்கள்

ஆண்டு ஒன்று
ஆகவில்லை.

இன்று
நியாயம் பற்றி
பேசுவதற்கு
ஏது இடம்?

நியாயங்கள் புதைக்கப்பட்ட
குழியில்
நிமிர்ந்து வளர்ந்திருக்கு
அநியாய மரங்கள்.

விருட்சமாகி
வேரூன்றி
விழுதுகளுமல்லவா விட்டுள்ளன.

சொந்தங்கள் என்று
சொல்வதற்கும்
உறவுகள் என
உணர்த்துவதற்கும்
காலம் நேரம் பார்த்து
இராகு காலம் விடுத்து
மரண யோகம் தவிர்த்து
சுபநேரம் தேடி
சொல்லவேண்டியுள்ளதே?

தவறுதலாகவேனும்
பஞ்சாங்கம் பார்க்காது தொடங்கினால்
எடுத்த காரியம் எதுவென்றாலும்
நொடிப்பொழுதில்
முடிந்துவிடும்.

வீட்டு வாசலில் நின்று
உள்ளே செல்லாதே!
என மறுக்கப்படும்.
நம் ஊர்க் காற்றைக் கூடஅருகில் நிற்பவருக்குத்
தெரியாமல்  சுவாசித்துக்கொள்.

அறிந்தால்

உள்ளே இழுத்த காற்று
வெளியே வருவது சந்தேகம்.

காரணம்,
 சுபநேரத்தில்
நீ சுவாசிக்கவில்லை.

நீ வளர்த்த
பசுக்களைப்பார்.
ஆனால்
அத்தோடு திரும்பிவிடு.
மீண்டுமொரு தடைவ
பார்க்காதே.
பார்த்ததால்
உனக்குச் சகுனம்
பிழைத்துவிடும்.

ஓடித்திரிந்த
உன்
விளையாட்டு முற்றம்
புல் பூண்டுகளால்
மூடியுள்ளது
பி;ச்சைக்காரனின்
முகத்தை மூடிய
தாடியைப்போல.

சவரம்செய்ய
நினைக்காதே.
சகுனம் பிழைத்தால்
சவரக் கத்தி உன் உதட்டை
வெட்டிவிடும்.

இப்போதெல்லாம்
இருட்டுக்கள் என்பதே
மறந்தவிட்டது.

வானத்தில் நட்சத்திரங்கள்
பார்த்து
        நித்திரைக்குமுன்
நிலாவைக் காட்டி
உணவூட்டும்
அன்னையின்
எண்ணங்களெல்லாம்
மறுக்கப்பட்டுவிட்டன.

சேவல்
அதிகாலையில் கூவுகின்றது.
ஆனால்
கோழியின் கூவலாகத் தெரிகிறது.

உயர் கல்விக்காய்
வாழ்வில்
கால் நூற்றாண்டு
கரைந்தபோது
வெட்டுப்புள்ளி
வீழ்த்திவிடுகிறது.

எழுந்துநின்று
இனியென்ன செய்வது?
வேலைக்காவது
போவோம் என்றால்
நீண்ட வரிசை நெடுநாளாய்க்
காய்ந்த நிலையில் நிற்கிறது.

தலையில் கறுப்புத் தொப்பி
கையில் பட்டச் சுருள்.

சரி

மண்வெட்டியைத் தூக்கி
வயலுக்குச் செல்வோம் என்றால்…
கௌரவம் கலைக்கிறது.

ஓடியபோது
உனக்கேது காணி

அது…… அது….

அந்தப் பக்கமல்லவா?
திரும்பிப்போ.
என்கிறது மனசாட்சி.

இனிமேல்
கிளிக்கூடுகளும்
மைனாக் கூடுகளும்
செய்பவர்கள் வேண்டாம்.

அவற்றை
அடைத்துவைத்ததால்
அவை போட்ட
சாபங்கள்
பலிக்கத்  தொடங்கிவிட்டனவோ?

மாடுகளை
வண்டிலுக்காகவேனும்
அடிமைப்படுத்தாதே.

அவைகளும் சொல்லியிருக்கும்
தங்கள் வேதனைகளை.

கடற்காற்று  வேண்டாம்.
ஆற்றுக்காற்றே போதும்.
அதில் சுவாசிப்போம்.

சுறா மீன்களும் பாரை மீன்களும்
வேண்டாம்
யப்பானும், செல்வனும் இருக்கட்டும்.

தென்னங் கன்றுகள் நடவேண்டாம்.
பாதியில் பன்றிகள்
பதம் பார்த்துவிடும்.

கடி வெடி  வைத்தால்
முள்ளம்பன்றிகள்
பொறுக்கி மூலையில்
குவித்துவிடும்.
கழனியை ஊற்றாதே
கறி சமைக்க உதவும்.

வாழ்வில்,
கல்வியில்,
தொழிலில்,
உணவில்,
பேசுவதில்,
நடப்பதில்,
சிரிப்பதில்,
கதைப்பதில்,
நியாயங்களைக்
கேட்க நினைக்காதே.

இலவசமாக
எயாடெல் சிம் மட்டும்
ஏராளம் வாங்கலாம்.
இங்கு மட்டும்
அவை
மறுக்கப்படாது,      உனக்கு
தேசிய அடையாள அட்டை
இருந்தால்மட்டும்.

அட்டை இல்லையெனில்
அங்கு உன் நியாயங்கள்
ஏற்றுக்கொள்ளப்படாதவைகளல்லவா?

சளைத்துவிடாதே.

விழுவதெல்லாம்
மீண்டும் எழுவதற்கே
அன்றேல்
மரத்திலிருந்து விழுந்த
ஆலம்வித்து
மீண்டும் விருட்சமாகுமா?

எழுந்திரு

நியாயங்கள் என்றும் அழியாதவை.
கிடைக்கும்வரை சோராதே.


தூக்கணாங்குருவிக் கூட்டை
ஒருமுறை
சிந்தித்துப்பார்.
அதனால் முடியுமென்றால்
ஏன்
உன்னால்………

குரங்குகள் சிதைத்துவிடுமென்று
அவை
கூடுகட்டவில்லையா?
சிக்கலை விடுவித்துப்பார்.

திருப்தி தோன்றும்.

உன்னால் முடியாதது
ஏதுமிருக்காது.
இது நெப்போலியன் கூற்று.

“தர்மத்தின் வாழ்வுதனை
சூது கௌவும்     மறுபடியும்
தர்மமே வெல்லும்”



சேனையூர்.இரா.இரத்னசிங்கம்
2010-10-11

மதுவும் மாதுவும்

மதுவும் மாதுவும்
மங்கையும் மதுவுமொன்று
மயக்கிடும் தன்மை தன்னில்
பங்கயத்தமரும் பிரம்மன்
பாங்கியும் அமர்ந்தாள் பக்கம்.

திங்களைச் சூடுமெங்கள்
சிவனது உமையுங்கூட
பங்கெனப் பாதிபெற்றால்
பாதியைக் கொடுத்தாரென்றும்.

போதைதான் இரண்டுமென்றால்
புனிதமும் உண்டு அங்கு
பார்த்திட்டால் போன ஒன்று
பருகிட்டால் போதை மற்று.

சாதனை போதைக்குண்டு
சரித்திரம் பலவுமுண்டு
ஆட்சிகள் உயர்ந்ததுண்டு
அனேகமாம் சரிந்ததுண்டு.

போதையைத் தேடி அன்று
போயினர் சங்ககாலம்
பேதையைத் தேடிச்சென்று
பெற்றிட்ட வரலாறுண்டு.

மாதவி போதையாலே
மயங்கினான் கோவலன்தான்
காவியங் கண்டோமின்று
கண்ணகி சிலம்பினாலே.

விரும்பிய பெண்டீர் போனால்
விருப்போடு தாடி மீசை
பருகிடும் பழைய கள்ளு
பலர் பெயரோ ‘தேவதாசு’

சாதனை படைக்குந் தன்மை
தரணியில் போதைக்குண்டு
வேதனை பலவுமுண்டு
வீதியில் அலைவதுண்டு.

கோலங்கள் மாற்றுஞ் சக்தி
குவலயத் திருப்பதெல்லாம்
மங்கைக்கு முண்டு கண்டீர்
மதுவுக்கு முண்டு உண்மை.

- சேனையூர்.இரா.இரத்தினசிங்கம் -
2010.10.11

கவியல்ல நிஜம்

கவியல்ல  நிஜம்

பிரிவு……
உன்னையும்,  என்னையும்  விட்டு
உலகையும்,  உடலையும்  விட்டு
மற்றெல்லாம்   பிரிவல்லவே.

ஆடைபிரிந்து அம்மணமானதும்,
அந்தரங்கம் பிரிந்து அவமானம் சுமந்ததும்
பிரிவென்றாகுமோ?

முன்னம் பள்ளி பிரிந்தே
முதநிலைப் பள்ளியாகி
அது பிரிந்தே உயர் பள்ளி ஏகி
அழகிய பிரிவு வந்தே
பல்கலைக் கழகமாக…
பட்டங்களும், பதவிகளும்
பாராட்டுதல்களும் பலவும்
ஒன்றன் பிரிதலும் ஒன்றன் வருதலுமே
உலக இயல்பென்றாகும்.

நீ உலகைக் காணலாம்
உடலைப் புழுவாய் நெளித்தே ஊரலாம்
மெதுவாய் நிமிர்த்தி நழுவலாம்
இருந்தும் நின்றும்
விழுந்தும் எழுந்தும்
நடந்தே அடி பிரிக்கலாம்.
பின்னே கால்
பிடரி பட ஓடலாம்
நீ………
கருவுலகை விட்டு
பிரிந்த பின்னாலே.

மங்கையாய்ப்  பூத்தால்
ஓர் மாலையாகிடும்   பூ
மணமாகிடவும்  இரு
மாலையாகிடும்   பூ
மடியினில்  கிடத்தியே
மாரடித்து  மண்ணில்
மறைத்திடும்  உடலை
மூடிடும் மாலை   பூ

மரத்திலும்  செடியிலும்
கொடியிலும்  காம்பறுந்து
கைப்பிரிந்தே
நூலேறி பிணைந்ததாலல்லவா?

புதிதாயோர்  பூமி  காண்பாய்
புத்தகமாய்ச்  சரிதமும் காண்பாய்
கனமாய்க்  கோடி  கொள்வாய்
உன் பாதச்  சுவடுகள்
யாரைத்  தொடர்ந்தோ
பச்சை  மண்ணைப்  பெயர்த்தடி
பிரிந்ததாலே.
இழுத்து  விடும்  மூச்சும்
நில்லாமல்  ஓடும்  காற்றும்
இல்லாது  நீ  இருந்ததுண்டா?
சொல்லாற்  பறிதலும்
சொல்லும்  பொருளும்
பாட்டுமென்றாகியே
பின்னெல்லாம்
கடலும்  காடும்   வானும் வரைந்திடவும்
வளியதன்   பிரிதலாலேயாம்.

உன்னைப்  பார் - உன்
உருவம்  பார்
ஒரு  நொடி  உன்
கண்ணைக்  கடந்துமே
கருவி பிரிந்து
ஒளி பிடித்த புகைப்படமே அது.

பாடு  பேசு  பலமாய்த்  திட்டு
ஓ… என்றே அழு
ஆ… என்றே விளி
ஈ… என்றே சிரி
ம்… என்றே நீ ஊமையாய்க் கிடக்க
இவை  பெறுமா?
உன்
உதடுகளின்
உண்மைப்  பிரிவில்
உதிப்பவைதான்  இவை.

ஆயிரம்  பக்கமாகலாம்
அற்புதக்  கதையுமாகலாம்
ஆக்கியோன் படைத்து
அழுக்குப் படாது
அட்டைக்குப் பூட்டிட்டு
அடுக்கி வைத்திருக்கும்வரை அது
அசையாத உன்
அனுங்காத உள்ளம்போன்றதுதான்.
பக்கம் பிரித்துப் படிக்கையில்
சொற்கள் பிர்த்தே அறிகையில்
வரிகள் பிரித்தே தெளிகையில்
ஆயிரம் பக்கங்களும்
அற்புதக் கதையாகலாம் நாளை
உன் உள்ளங் கவர்ந்த
அதிசயக் காவியமாகலாம்.

முகிலைப் பிரிந்து மழையாவதும்
மூச்சைப் பிரிந்து உயிராவதும்
நீரைப் பிரிந்து அலையாவதும்
நிலத்தைப் பிரிந்து சிலையாவதும்
உன்னை நீ பிரிந்தே ஓர்
உயர்வாவதும்
உலக நியதி.

செயலற்றநிலை பிரிவல்ல. பிரிந்தே  இருப்பதும் செயலல்ல.
சேர்ந்தே இருப்பதும் செயலல்ல.
செயலற்ற நிலை சேர்க்கையுமல்ல.

பிரிந்தே கிடப்பது
செத்த நிலை.
சேர்ந்தே இருப்படுது அதே நிலை.

ஆக…
சேர்வதும், பிரிவதுமே
வாழ்க்கையில்
தத்துவமும்
நிஜமும்.

பிரிவோம்,
பின்னர் சேர்வதற்காய்.

பிரிகின்றீர் பிரிகின்றீர்.
பின்வந்து சேருங்கள்

பூக்களாய் பிரியுங்கள்
மாலையாய் சேருங்கள்
பக்கமாய்ப் பிரியுங்கள்
பாடமாய் ஆகுங்கள்.
கருவாய் பிரியுங்கள்
உயிராய்  உலவுங்கள்.
காற்றாய்ப் பிரியுங்கள்
மூச்சாய்  சேருங்கள்.
கல்லாய்ப் பிரியுங்கள்
சிலையாய் மிளிருங்கள்.
கலையாய்ப் பிரியுங்கள்
நிலையாய் ஆகுங்கள்
நிஜமாய்  வருவீர்கள்  என்றே
நானும் பிரிகின்றேன்…
மீண்டும் வருவதற்காய்.



கட்டைபறிச்சான் மதுரன்
2010.10.11

சாம்பல்பூத்த தணற்காயங்கள்

சாம்பல்பூத்த தணற்காயங்கள்

மரணத்தின் பிடியில் நின்று
பேசப்படுகின்ற
மாற்றுக் கருத்துக்கள்.

சில சுடலை ஞானங்களுங் கூட.

சவங்களுக்கு மட்டுமே புரிதலான
பாஷையில் பேசப்படுகின்ற
மரண சாசனங்கள்.
ஏனெனில்
மறுக்கப்படாதவை இதுவரை எஞ்சவில்லை.

சில உண்மைகளுங் கூட.

பேறு காலநேரம் குறுகலானபோது
கற்பிணியைக் காவிச் சென்று
நடு வழியில்
உயிருக்கான உத்தரவாதம் மறுக்கப்பட
வெற்றுக் கோதுகளை மட்டும்
வேறு மருத்துவமனையில் கொட்டிவிடும்
முதலுதவி வண்டிகளில்
வெளியேறி விலகாமல் உலவும்
உயிரின் வாடை.


எனக்காக என் கைச்சிறைக்குள்
தாலியால் கட்டுண்டுபோகும் பெண்,
கூந்தலில் இன்னும்  விலகாமல்
இறுக்கமாய்
என்னைவிடவும் நெருக்கமாய்
ஒட்டியிருக்கும் அவளது
காதலன் சூட்டிவிட்ட கலியாணப் பரிசு.

காதலின் அஸ்தமனத்தில்
மௌனமாய் விலகும்
அவளுக்கு மட்டும் சுடும்
பெரு மூச்சு.


விடுதலை வேண்டி வீதியிறங்கியபோது
நாடு இல்லையென்றானது.
நாட்டில் நல்லாட்சி நடக்கின்றதாம்  இப்போது
எமக்கு
வீடுகூட இல்லை
இதை
வெளியில் சொல்ல முடியவில்லை.


சுந்தரமூர்த்தி நாயனார்
சுவையான புராணம்
சோர்விலாத  பெருங்கதை.
சிவனால் தடுக்கப்பட்டதும்,
ஆட்கொண்டு அடிமைகொண்டதும்,
அவன் விரும்பியபடியே
பரவையும், சங்கிலியும் சதிகளானதும்,

மணவறைவரை ஏறி
மங்கலமாய்  அணிபூண்டு
தனித்துவிடப்பட்ட மணப்பெண்ணின்
மரணிக்கும்  வாழ்க்கையின் ஓலத்தில்
அத்திவாரமிடப்பட்டமை,
அனைவரும் அறிந்தகதை.
மணப் பெண்ணின்நிலை?

சிவனே……… வா…!
வந்து ஒரு பதில்சொல்.

சாமி ஆடும்   
சாட்டை வாங்கும் என்
சஞ்சலம் போக்கும்
கட்டுச் சொல்லும்
என்றெல்லாம்
உனக்கு  நம்பிக்கையில்லையோ
என்னவோ…
வீட்டிலே சாமிப்படிக்கட்டில்
சாராயத்துடன் காத்திருந்த
என் முன்னே
சவமாய் விழுந்து படுகளங்கிடக்கும்
மாரியம்மா
உனக்கும் நியாயங்கள்
மறுக்கப்பட்டனவா?

புதைக்கப்பட்ட எங்களின்
நிலையான பூர்வீகம்போல.

ஒருமுறை போனேன்
வீகோவும் பரசிடமோலும்
இருமுறைபோனேன்
விற்றமின் சீயும் பரசிடமோலும்
மூன்று நான்கு
நான்கு ஐந்து
எப்போதும் எவ்வேளையும்
அதேதான்…
மாறாத என்
மாற்றப்படாத
வயிற்றுவலி மெல்ல உயிர்க்கிறது.

மறுக்கப்பட்டது
வலியின் ரணமா?
மருந்தின் குணமா?


அவன் அவளுக்குக் கொடுத்து
நிராகரிக்கப்பட்டதால்
அடிக்காமல்  அவனே  அவனை
அறைந்துகொண்ட
 முதல் காதல் மடல்.

வயதுண்டு வளர்த்தி உண்டு
உணர்வு கொண்டது தவறா?
நெஞ்சில் காதல் முளைத்தது தவறா?
தோல்வியில் அவனும்,
வெற்றியில் அவளும்
காதலில் நிராகரிக்கப்பட்டது
நியாயம் ஒன்றுதான்.


சிலுவை சுமந்த பரிசு
அறையப்பட்ட ஆணிகள்.
அவர்களால் ஏவப்பட்ட
எறிகணைகளைச் சுமந்து
எரிந்தும் எரியாமல் நிறம் மாறி
உடல் சுமந்து வந்த பரிசு

உச்சி மண்டையில்
நச்சென்று மாட்டிய
ஒன்பது அங்குல வில்லுக் கத்தியா?
அல்லது
ஓரங்கள் விலக்கி  உயிருடன் தசைப் பிண்டத்தில்
ஒழித்து விளையாடிய  கொல்லும் கத்திகளா?

இத்துடன் முடிந்ததா?

நிலந்தோண்டி நீர் புசித்திட
நகம் பிறாண்டி நாக்கால் நக்கி
உறுஞ்சியும் ஒன்றும்வாராமல்

கிடக்க

முதுகிலே  அனலேற்றி
மின் நிலையம் கட்டவாம்.

பிறவிக் குருடரை
கண்டபடி விழியென்றனர்.
காணாததைச் சொல்லென்றனர்.
இப்போ
பார்வையை மறைக்கவும்
இமைகளை மூடென்கிறார்,
இருட்டிலே கிட என்கிறார்.

ரணவலி தெரியுமா?
சாம்பல் பூத்த தணற் காயத்தில்
ஆணிகள் மாட்டிய
அந்த வலி புரியுமா?
நாம் பட்டோம்.

தமிழர் நாம் பட்டோம்.

அடி அடி அடி அடி
ஆணி அடி
ஏணிவைத்தேறி
பிடரி மயிர் பிடித்து
ஐந்து அங்குலம் என்ன
ஆழுயரத்தாணி கொண்டடி.

அந்த

அவுஸ்திரேலியாவும்
ஆரியவதியும்போல.

அப்போதுதான் புரியும்
சாம்பல் பூத்த தணற்காயத்தில்
ஆணி மாட்டிய அந்த வலி.



கட்டைபறிச்சான்
மதுரன்
2010-10-1

Sunday, 10 October 2010

சுடலை ஞானம்

சுடலை ஞானம்

by Pathiniyan Sujanthan on 10 அக்டோபர் 2010, 06:28 க்கு


இவர்களுக்கு
சுதந்திரத்தின் மீதான பசி எடுத்த போது
நான் ஒரு வரலாற்றை ஏப்பம் விட்டுக்கொண்டிருந்தேன்..
நான் வரலாற்றுக்குள் இருந்த காலத்தில்
இவர்கள் பஞ்சனைகளின் கூரைகளில் இருந்தார்கள்

எனது காலத்தில்
எனக்காகவும் என்னனோடிணைந்தவர்களுக்காகவும்
பலர் வந்தனர்
பாரதி சொன்ன அக்கினிக் குஞசுகளைப் போலவும்
அர்ச்சுனனைப்போலவும்
எனக்காக வந்தவர் மீது
இன்று சுதந்திரம் பற்றிப் பேசுவோர்
கற்களை வீசினர் காறி உமிழ்ந்தனர் எனினும்
அவர்கள் சிந்திய ரத்தத்தில்
இவர்களுக்கான சுதந்திமும் இருந்தது
எனக்காக வந்தவர்
அவரவர் காரியம் முடித்து
யாரும் வரமுடியாப் பேரிருளுள்
வந்தவர் போயினர்….

எங்களின்காலத்தில்
கருத்துக்கள் மீது நித்திரை கொண்டபடி
நாக்கு வளிக்காமல் பேசித்திரிந்தவர்களுக்கு
இப்போது சுதந்திரப்பசி….
இவர்கள் வரலாறு ஒன்றை ஏப்பமிடும் காலத்தில்
இன்னும் சிலருக்கு சுதந்திரப் பசி எடுக்கும்.

Friday, 1 October 2010

காதல் இறந்த உலகம்

காதல் இறந்த உலகம்


இரவு பகலாய்
என்னை
ஒப்பாரி வைக்கச் சொல்
கவலைகளில் மூழ்கச் சொல்
கோபம் தலைக்கேற
உடம்பைக் கத்தியால் கீறி தணிக்கச் சொல்……..

நான் உயிரோடு இருத்தலை
உறுதி செய்ய பயத்தில்
மூச்சிரைக்க மூச்சிரைக்க
நாக்கு இழுபட ஓடச்சொல்
அலுக்காமல் களைக்காமல்
ஓடியோடி உயிரின் இருத்தலை
காக்க முடியும் என்னால்….
இவைகளே! இவைகளே!
எனக்குப் பழக்கப் பட்டவை…

காலும் கையும்
மூட்டு மூட்டாய்க் கழன்று விழுந்தாலும்
நாளைக்காய் ஊர்ந்து
ஊர்ந்து உயிர் வாழ்வேன்….

 ஒன்றென்ன
ஆயிரம் பிணங்கள்
வீதியில் கிடந்தாலும் மாரடிப்பேன்
கால் விரலால்
நிலம் கிண்டிப் பிணம் புதைப்பேன்

 அகதி முகாமாய் இருந்தாலென்ன
புழுத்த அரிசியாய் இருந்தாலென்ன
என்
பசித்தலிலும் புசித்தலிலும் மாற்றமில்லை……

இவைகளே
என் வாழ்வின் நிகழ்கால அனுபவங்கள்
தயவு செய்து என்னை
காதலிக்கச் சொல்லாதே….

உன் காதல் மொழி பற்றிய
அறிதலோ புரிதலோ
என்னிடம்
இல்லாதவரை நிர்ப்பந்திக்காதே………!

இரு புறமும் நெருப்பு எரிய
நடுவில்
உயிர் வழிந்து கிடக்கும்
கட்டெறும்புக்கு காதல் ஒரு கேடா…?

பூனையின் கால்களில்
சிக்கிய சுண்டெலிக்குக் காதல்
வருமெனில்
எனக்கும்…..எனக்கும்…..
மாடு மிதித்த கோரைப் புல்லுக்கு
காதல் வருமெனில்
எனக்கும் ……எனக்கும்…….

உனது காதல்
உனதும் எனதும் வாழ்தலை
உறுதிப்படுத்துமெனில்
நம்
தொன்மைத்தைத் தூக்கித் தருமெனில்
அதுபற்றிச் சிந்திக்கலாம்….

சத்தமும் ரத்தமும்
இல்லையென்றாகி
நான் சிந்திக்க…….
சிரிக்க…
கற்பனை செய்ய……
கவலைப்பட……..
கவிதை எழுத…
எனக்குநீதான்…நீ மட்டுந்தான்……
என்றான பின்
உன்
காதல் மொழியில் பேசு என்னிடம்
அதன் பின்…..
அது பற்றிக் கதைப்போம் நானும் நீயும்…

பிரிவின் வலியிலிருந்து………

பிரிவின் வலியிலிருந்து………

வருடங்கள் கடந்த பின்னும்
உன் நினைவுகள்
என்னைத் துரத்தியபடியே…
நீ பிரிந்து போன
கடைசிக் கணங்கள்தான்
நினைவின் இடுக்குகளில்
கண்ணீராய்க் கசிகிறது ….

நீ
தனித்திருத்தல் அறியாத உயிர்
என்பது ஒரு புறம்
என்னோடு வளர்ந்தவன்
என்பது இன்னொரு புறம்
இருந்தும்
உன்னையும் என்னோடு
அழைத்து வர முடியாமல் போனது
அன்று

அகதி வாழ்வில்
ஊர் பிரிந்த பின்னும்
நிச்சயமில்லாத பிச்சை உயிரை
அடி மடியில் கட்டியபடி
ஒரு வாரம் கழித்து
உனக்காக ஊர் நுழைந்தேன்….

தனித்திருத்தலின் வலி பொறுக்காது
தூரத்தில் என்னைக் கண்டதும்
ஓடிவந்து பாய்ந்து நகம் பதித்தாய்
மொழி பெயர்க்காத
உன் மொழியில்
அனுங்கி அனுங்கி
ஏதோ சொன்னாய்
வாலை ஆட்டி ஆட்டி முனகினாய்….

ஒட்டிய வயிறும்
பூளை வடிந்த கண்களும்
உனது தனிமையை
தாமதமின்றியே உரைத்தது எனக்கு……..

தாமதிக்க முடியாத நிமிடங்களில்
கல்லும் நெல்லுமாய்
அவிந்தும் அவியாமலும்  உணவளித்தேன்
அதுவே
நான் போடும்
கடைசிச் சாப்பாடு என்பதறியாமல்
நாக்கு வெந்து போகத் தின்று முடித்தாய்
உமிழ் நீர் தீரமட்டும் நக்கி நக்கி
என்னை ஈரப்படுத்தினாய்……

யாருமில்லாது சூனியமாய்க் கிடக்கும்
ஊரில் எப்படி நான் மட்டும்
என்னையும்
அழைத்துச் செல் என் எஜமானே என்று
உன் ஊழையிடலும் அனுக்கமும்
சொல்லாமல் சொல்லியது என்னிடம்

எப்படி முடியும்
நாங்களே அகதி முகாமில்
அவியாத சோற்றுக்கு வரிசையில் நிற்கையில்
நீயும்
எப்படி எங்களோடு
அதனால்
மனமின்றிப் பிரிந்தேன்
பாதி வழித் தூரம்
நாக்கிழைக்க ஓடிவந்து திரும்பினாய்
அந்தக் கடைசிக் கணங்கள்தான்
இன்னும் என்னோடு …..

என்னைச் சுற்றிச் சுற்றி வரும்
பிரிய நாய் குட்டியே
இன்று இறந்து போயிருப்பாய்
உன் மரணம்
உன் ஊரில் அந்தப் பொன்னிலத்தில்
நிகழ்ந்து போனது
மானமிழந்து நீ நிலம் பிரிந்துபோனதில்லை
அதனால்தான்
உன்னை நினைக்கும்போதெல்லாம்
கொஞ்சமாவது ஆறுதலடைகிறேன்

ஊரின் நினவுகளிலிருந்து

ஊர்க் குருவி.

உயிர் பருகும் ஊர் நினைவில்
தினமும் உருக்குலைந்து போகிறதுமனது…….!
நடக்க இருக்க படுக்க என
சம்மந்தமில்லாமலும்
காரணமில்லாமலும்
மின்னல்கீற்றாய்
உசுப்புகிறது ஊர் நினைவு…

நான் நடக்கப் பழகிய தாய்மடியே….!
உன் மேனியில்
புரண்டு புரண்டு
ஊத்தை படிந்த என் தேகம்
இப்போதும்
அந்தப் புரள்வுக்காய் காத்துக்கிடக்கிறது…..

முன்பு காலால் மண்கிளறி
அதிலெழும் புழுதியெல்லாம்
மோந்து மோந்து மணப்பேன்
அந்தப் புழுதியெல்லாம்
என் சுவாசப்பைகளின் ஓரத்தில்
இறுகிப் போய் இருக்குமெனில....

சின்ன வயதில்
அம்மாவைக் காணாமல்
கோடிப் புறத்தில் பதுங்கி
மண் கட்டி திண்பேன்
அந்த மண்ணின் கட்டியெல்லாம்
இரைப்பையில் செரித்து
உடம்பெல்லாம் இரத்தமாய் ஓடுமெனில்…..

நானும் தம்பியும்
மண்ணில் உருண்டு
மணல் வீடு கட்டி விளையாடுவோம்
அந்த ஊத்தையெல்லாம்
என் தோலில் இப்போதும்ஒட்டியிருக்குமெனில்……

மண்ணோடு
ம்ஊரின் நினைப்போடும்
இந்தப் பிறப்பில் வாழ
இப்போதைக்கு
இவை போதும் எனக்கு…

சஜந்தன்

புணர்தலின் கடைசி விதி

புணர்தலின் கடைசி விதி

உயிர் செய்யும்
தொழிற்சாலை செய்
புணரு….
இனிப் புணர்தலை மட்டுமே
தொழிலாகக் கொள்
வெட்கம் பாராதே
நிண்ட இடத்தில்
கண்ட இடத்தில்
விரும்பியோ விரும்பாமலோ
கலவி கொள்……

பன்றிகளா நாம்
ஒரு தரம் பிணைந்து பதினாறு குட்டி போட….
ஆமைகளா நாம்
ஆயிரம் முட்டைகளிட்டு
அரைவாசி பொரித்தாலும்
முதலுக்கு நட்டமில்லை

நாம்
ஓயாமல் புணர்ந்தாலும்
பிள்ளை பெற பத்து மாதம்
காத்து காத்திருக்கும் மந்தப் பிறவிகள்.

வேருத்துப் பிசிபிசித்தாலும்
கலவியில் களைத்துப் போனாலும்
எரிச்சல் எடுத்தாலும்
உனக்காக அல்ல…..நமக்காக
சளைக்காமல் கலவி கொள்
பிள்ளை பெருகட்டும் ….பெற்றுத் தள்ளு

மூத்த பிள்ளைக்கு
முப்பது வயதானால் என்ன
உன் கடைசிப் பிள்ளை
கர்ப்பத்தில் இருக்க வேண்டும்
கருமுட்டை காலியாகும் வரை….
விந்துக்குளம் வற்றிப் போகும் வரை….
இதுவே
உன் வேலையாகட்டும்

நமக்கு மட்டுமல்ல
எல்லோருக்கும்
உயிர் தேவையென்றான பிறகு
பிள்ளை மூக்கோடித் திரிந்தாலும்
பிளைத்துக் கொள்ளும்
அதனால் பெற்றுத் தள்ளு….

பிள்ளைகள்
பரிசோதனைக் குளாயில் பிறந்தாலென்ன
பலோப்பியன் குளாயில்
பிறந்தாலென்ன
சிந்திக்காதே …..
நாளை
பீரங்கிக் குழலிலும்
பிள்ளை பிறக்கும் அலட்டிக் கொள்ளாதே….


நமக்கு மட்டுமல்ல
எல்லோருக்கும்உயிர்
தேவையென்றான பின்
சிந்திப்பதில் பயனில்லை…
பெறு பெற்றுத் தள்ளு

காய்க்காமல் பூக்காமல்
உன் பரம்பரையில்
நாளுக்கு பத்து பதினைந்து
பாடையிரேல போகும் காலமிது
ஒரு பிள்ளை போதும் என்று
நீ புணராமல் சோம்பியிருந்தால்……….

நாளை
எறும்பும் கருக்கட்டிப் பிள்ளை பெறும்
காகத்தின் கூட்டில்
குயிற் குஞ்சு பொரிக்காது
முட்டைக்குள் இருந்து
சாவோடுகைவீசி வருவான் நம்பிள்ளை.

உயிர்….உயிர்….நமக்கு மட்டுமல்ல
எல்லோருக்கும் தேவயென்றான பிறகு
புணர்தலைமட்டும் நிறுத்தாதே….
ஒவ்வொரு நாளும்
சுட்டுப் பழக
பிள்ளை பெற்றுக் கொடுக்கா விட்டால்
நாளை…நீ…நீ….இருக்க மாட்டாய்…

சஜந்தன்

உயிரோடு உலாவும் சமாதிகள்

உயிரோடு உலாவும் சமாதிகள்


இறந்து போனவர்களின் சாட்சிகளாய்
பரந்து கிடக்கும் சமாதிகளோடு சமாதிகளாக
வெயிலை உறிஞ்சும்
எங்கள் வெண்ணிறக் கூடாரங்களும்
விரிகின்றன…….!

இன்று
சுடலைகளெல்லாம்
தற்காலிக முகாம்கள்
என்ற பெயர்ப் பலகைகளுடன்………
முற்றும் இழந்திருப்பதால்
அவர்களுக்கு
நாங்களும் ஒரு வகையில் பிணங்கள்தான் போலும்….!

எங்களின்
வெண்ணிறக் கூடாரங்களும்
சமாதிகள்தான்
சத்தமில்லாமலேஅடக்கம் செய்யப்பட்டிருக்கிறேமாம்

பக்கத்தில் புதையுண்ட பிணங்கள்
விழித்துக் கொள்வதில்லை…...
கவலை கொள்வதில்லை
நாங்களோ…!
நிறுவனங்களின்
கொடியேந்தியவாகனங்களைக் கண்டால்…..
அதிகாரிகளைக் கண்டால்….
நிவாரணம் என்றால்….
விழித்துக் கொள்கிறோம்.

இவ்வவுதான்
மற்றப்படி
சமாதிப் பிணங்களுக்கும்
எங்களுக்கும்
பெரிதாக ஒன்றும் வேறுபாடிருப்பதாய்
எம்மால்உணர முடியவில்லை

சஜந்தன்