Monday, 6 December 2010

சேனயூர் முத்துமாரியம்மன் காவியம்



வாரியருள் புரிகின்ற மாரியென வந்து
வணங்கிவரும் அடியவர் தம் துயர் பிணி களைந்து
காரியமனைத்துக்கும் சக்தி நலமருளும்
காந்த விழி ஆயிரமுடையளே தாயே
நேரிய தர்ம நெறி நிலைபெற்று ஓங்க
நின்மதி நலமோடு நாடு வளம் செழிக்க
பாரிலுயர் சேனையூர் பதியினில் வாழும்
பரியுடை சிறீ முத்து மாரியே காப்பாய்

அண்டமுதல் அனைத்தையும் ஆழுமொரு சக்தி
அவனியில் உனையன்றி யாருண்டு அம்மா
தொண்டு பணி செய்துன்னை தொழுமடியவர்க்கு
தொல்லை தரு நோய் பிணியை மாற்றிடுவாய் அம்மா
எண்ணமதில் உனை ஏற்றி பணிந்து வருவோர்க்கு
ஏற்றமுடன் குறைவின்றி வாழ வழி செய்வாய்
வண்ணமிகு சேனையூர் பதி தன்னில் அமர்ந்த
வரம் தரும் சிறீ முத்து மாரியே தாயே

உழைக்கின்ற மாந்தர்கள் உயர்வு பெற வேண்டும்
உயர்வான தர்ம நெறி உயர்ந்தோங்க வேண்டும்
தழைக்கின்ற வறுமைத்துயர் தான் மாற வேண்டும்
தடம் புரளும் தமிழர் குலம் தலை நிமிர வேண்டும்
மழை பொழிய பயிர் செடிகள் செழித்தோங்க வேண்டும்
மாந்தர்கள் நலமோடு வாழ்ந்துயர வேண்டும்
நிலையான சேனையூர் பதியினில் அமர்ந்த
நீலியே சிறீ முத்து மாரியே தாயே

ஏர் கொண்டு வாழ்வோர் ஏற்றங்கள் காண
என்நாளும் திருவருள் நீ புரிய வேண்டும்
சீர் கெட்டு வாடிடும் தமிழர்கள் வாழ்வு
சிறப்பாக விளங்கிட அருள் செய்ய வேண்டும்
ஊர் மக்கள் உனை வேண்டி பூசிக்கும் போது
ஒரு தீங்குமில்லாமல் காத்திட வேண்டும்
பேர்போன சேனையூர் பதிதன்னில் அமர்ந்த
பெருமை மிகு சிறீ முத்து மாரியே தாயே

ஓடியே அலைவோர்கள் துயர் தீர வேண்டும்
ஓயாத போர் சண்டை தான் ஓய வேண்டும்
தேடியே வருவார்கள் குறை போக்க வேண்டும்
தொழில் வளம் பெருகிட அருள் தர வேண்டும்
வாடிடும் மாந்தர்கள் பசி தீர வேண்டும்
வறுமை பிணி இல்லாத வாழ்வு தர வேண்டும்
நாடிடும் சேனையூர் பதிதன்னில் அமர்ந்த
நாரணி சிறீ முத்து மாரியே தாயே

கெடுதலைச் செய்வோர்கள் மறைந்தோட வேண்டும்
கதியென்று வருவோரைக் காப்பாற்ற வேண்டும்
படுகொலை பாதகம் அழிந்தாக வேண்டும்
பண்போடு மாந்தர்கள் வாழ்ந்தாக வேண்டும்
விடுதலை எமக்காக விரைந்து தர வேண்டும்
வெற்றியில் அனைவரும் மகிழ்ச்சியுற வேண்டும்
தொடுமழகுச் சேனையூர் பதியினில் அமர்ந்த
தோகையே சிறீ முத்து மாரியே தாயே

தெரியாமல் செய்த பிழை பொறுத்தருள வேண்டும்
 செய்கின்ற நற்கருமம் சிறந்தோங்க வேண்டும்
சரியான பாதையை நீ காட்ட வேண்டும்
சந்ததிகள் உயர்வோடு தலை நிமிர வேண்டும்
உரிமையுடன் உயிர் வாழ வழி செய்ய வேண்டும்
உலகமெங்கும் ஒற்றுமை உயர்வு தர வேண்டும்
அரிதான சேனையூர் பதியினில் அமர்ந்த
அருள் நிறை சிறீ முத்து மாரியே தாயே

                                 குமரேசு கனகசிங்கம்
                                 கட்டைபறிச்சான் 07

No comments:

Post a Comment