அனமிகா பதிப்பகத்தின் பதினைந்தாவது வெளியீடாக "கொட்டியாரம் இலக்கியமரபு"தொகுப்பை வெளியிடுவதில் மிகுந்தமகிழ்ச்சியும்,திருப்தியும் அடைகிறோம்.மூன்று தசாப்தங்களுக்கு மேலாக யுத்தத்தின் நேரடி சாட்சியாக சின்னாபின்னமாகி உயிரிழந்து,சொத்திழந்து,பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த மண்ணையிழந்து ,ஏதிலிகளாய் அங்கும் இங்கும் தூக்கி வீசி எறியப்பட்ட நிலையிலிருக்கும் மூதூரும் அதைச்சேர்ந்த கிராமங்களும் இலக்கியச் செம்மை வாய்ந்த பிரதேசங்கள் என்பதோ,வெளியுலகுக்குத் தெரியாத அல்லது காலத்தின் ஓட்டத்தில் மறந்து போன பல சிறந்த எழுத்தாளர்களைக் கொண்டது என்பதோ,புதிய தலைமுறை எழுத்தாளர்களைத் தினந்தோறும் பிறப்பித்துக் கொண்டிருக்கிற இலக்கியச் செழுமை வாய்ந்த பிரதேசம் என்பதும் பலருக்குத் தெரியாத உண்மை.
இதனை மனதில் கொண்டுதான் இத் தொகுப்பை சுனாமியின் கோரத்தாண்டவத்தில் நாங்கள் பறிகொடுத்த எங்கள் மகள் அனாமிக்காவின் நினை வாக வெளியிட முடிவு செய்தோம்.
இலங்கையின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான இலக்கியக்கலாநிதி வ.அ.இராசரெத்தினத்தைப் பிறப்பித்த அதே மண்தான் என் தாயின் பிறந்த மண்.குறுமண்வெளியில் பிறந்த என் அப்பா மூதூருக்கு அதிபராய் வந்து என் அம்மாவைக் கைப்பிடித்து மூதூர்,தோப்பூர்,சம்பூர் என கொட்டியாரத்தின் பல கிராமங்களிலும் அதிபர்களாக சேவை செய்தார்கள்.
1964ம் ஆண்டு கைக்குழந்ததையான என்னுடன் சம்பூர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு என் பெற்றோர் செல்ல அன்றுடன் நாங்களும் சம்பூரவர்களானோம்.கள்ளம் கபடமில்லாத நல்ல மக்கள்,மரியாதை,பண்பு,உபசரிப்பு,என்று எல்லா நல்ல பழக்கங்களும் என்னுள் வந்து செறிய அக்கிராம வாழ்க்கை உதவிற்று.இன்று எங்கள் மகன் லண்டனில் தன் ஆசிரியர்களையும் பெரியவர்களையும் பெயர் சொல்லி அழைக்க,நங்களோ "பேச்சார் பெத்தப்பா,வடிவேல் பெத்தப்பா,வயிரர் பெத்தப்பா,ராமர் பெத்தப்பா என்று வயதானவர்களைப் பண்பாய் விளித்து உறவாடிய காலங்கள் மனக்கண் முன் வருகிறது.
மருதமும் நெய்தலும் ,முல்லையும்ஒன்றுடனொன்று பின்னிப்பிணைந்து இயற்கை அழகையெல்லாம் தன் வசத்தே வைத்திருந்த சம்பூர், கூனித்தீவு,சூடக்குடா,கெவுளியா என்று சுற்று வட்டாரமெல்லாம்,எங்கள் காலடி படாத இடமேயில்லையெனலாம்."அய்யவின்"மகள் என்பதில் கிடைத்த பாதுகாப்பும் ,மரியாதையும் பயமில்லாமல் காடு மேடெல்லாம் "கட்டாக்காயும்,காரல் பழமும்,சூரப்பழமும்,தேடி என்னோடொத்த சிறுவர்களுடன் திரிய உதவியது.
பாடசாலைக்கும் வீட்டுக்குமான பதினைந்து நிமிட நடை தூரத்தை கடக்க ஒன்றரை மணிநேரம் எடுப்போம்,இந்திராணி அக்கா வீட்டுக் கொல்லைப்புறத்து கத்தா மரத்தை முற்றுகையிட்டு,தார்வீதியில் குத்தியுடைத்து பருப்பெடுத்துச் சாப்பிட்டு வீட்டுக்கு வர அப்பா பிரம்புடன் நிற்பார்.
செல்லக்குட்டி மாஸ்டர்,குழந்தைவேல் மாஸ்டர்,செல்லப்பிள்ளை அண்ணன்,மணிராசா அண்ணன்,நல்லம்மா அக்கா என்று பெரும் கூட்டமாக வண்டில் பூட்டி பாலைப்பழம் ஆயப் போவோம்,பெண்கள் சமையல் வேலையில் மும்முரமாக இருக்க ஆண்கள் நல்ல பழ மரம் தேடி வெட்டுவார்கள்,இது சரியில்லை கொட்டைப்பழம்,இது இனிப்பில்லை என்று தேன் மாதிரி இனிக்கும் பழம் தேடி ஆய்வோம்,இடைக்கிடை தெங்காயெண்ணையால் உதட்டின் பாலைத்துடைத்தும் கொள்வோம்.
சனி ஞாயிறென்றால் ஆனந்தன் மாமாவின் வாடியில் மீன் வாங்கி வர அண்ணாவும் நானும் போவோம் வள்ளத்தில் ஆனந்தன் மாமாவின் அனுமதியுடன் ஏறி வலை போட்டு,இளுத்து,துள்ளத்துடிக்க மீன் வாங்கி வீட்டுக்கு வர அம்மா இருந்ததைப்போட்டுச் சமைத்துச் சாப்பிட்டு குட்டித்தூக்கமும் போட்டு எழுந்த்திருப்பா, வலை இளுத்த களைப்புப் போக இருவருக்கும் பிரப்பம்பழம் கிடைக்கும்.
பன்னிரண்டு ஏக்கரில் விரிந்து பரந்திருந்த எங்கள் சம்பூர் வீட்டில் வித விதமாய் மா மரங்கள்,கறுத்தக் கொழும்பான்,வெள்ளை கொழும்பான்,அம்பலவி,விலாட்,மாதுளை அன்னமின்னா,கொய்யா,இலந்தை என்று எதற்கும் குறைவிருக்காது சிப்பிரியான் ஐயா தோட்டத்தைக் கொத்தி பண்படுத்தி கொச்சி,வெண்டி,கத்தரி என்று விதவிதமாய் விளைவிப்பார்.நாச்சியார் அம்மா குழந்தைகளைபார்த்துக் கொள்ள,சரசு நெல் அவித்துக் கொட்ட,செல்வண்ணன் வயலை பார்த்துக் கொள்ள,ராஜு வண்டியோட்ட, இரவில் செல்வண்ணனிடம் பேய்க்கதை கேட்க என் இளமைக்காலம் அழகானதொரு கவிதை போல கடந்து போனது.
90ம் ஆண்டு கலவரத்தில் எங்கள் சம்பூர் வீடு எருயுண்டு போன போது,எங்கள் இதையத்தின் ஒருபகுதியயையே பிய்த்து எறிந்தது போல வேதனைப்பட்டோம்.என்அப்பா அம்மாவின் மொத்த உழைப்பையும் மூலதனமாக்கி கட்டிய வீடு அது.தனியே செங்கல்லும் ,மண்ணும் ,சீமெந்தும் குழைத்துக் கட்டாமல் பெற்றோரின் அன்பும் பாசமும் கலந்து கட்டிய வீடு அது.
என் மகள் அனாமிகா அடிக்கடி சம்பூர் கதைகளை சொல்லும்படி கேட்கும் போது நான் அவளுக்கு அந்த ஊர் பற்றியும் அற்புதமான மனிதர்கள் பற்றியும் சொல்லும்போது அவள் "நான் உங்கள் மகளாக பிறக்காமல்சகோதரியாக பிறந்திருக்கலாமே அப்படியென்றால் நானும் உங்களுடன் சேர்ந்து இந்த சந்தோசங்களையெல்லாம் அனுபவித்து இருப்பேனே"என்று சலித்து கொள்வாள்.
இன்று சம்பூர் அதிஉயர் பாதுகாப்பு வலையமாய் போனது எங்கள் உயிரோடும் உணர்வோடும் கலந்து போனகடற்கரையும்,நுளம்பிலுப்ப்பையும்,தொட்டில்கல்லும்,வில்லுக்குளமும்,இப்போது நினவுகளாகவே உள்ளன.
No comments:
Post a Comment