Monday, 6 December 2010

பாரதி எழுந்து வந்தால்


எட்டயபுரத்து சிங்கம்
  எழிற்கவி சொல்லும் சங்கம்
கொட்டிய முரசில் எங்கும்
  தேசிய ஒருமை பொங்கும்
ஈரினம் ஈழ மண்ணில்
  இறந்திடும் சேதி கேட்டு
பாரதி இன்று வந்தால்
  விழிகளில் துளிகள் தங்கும்

பூங்குயில் ஓசை கேட்டு
  புதுக்கவி சொன்ன புலவன்
தூங்கிய இந்தி  யாவின்
  நரம்பினில் சூடு ஏற்றி
ஏங்கிய சுதந் திரத்தின்
  செவிகளில் கவிதை ஊற்றி
ஓங்கிய புகழில் நின்ற
  பாரதி இன்று வந்தால் ….

மாவலி கங்கை பாயும்
  மணிவள நாட்டில் இன்று
நாவலி இழந்து மாந்தர்
  நடுங்கியே வாழ்தல் கண்டு
நோவினால் வெந்து வெம்மி
  நொடியினில் சிந்தை செய்து
பாவினால் பாணம் எய்து
  பாலமாய் இணைத்து வைப்பான்

தேவரும் வந்து ஆடும்
  தேன்மலி சோலை ஈழம்
பாவலர் பாடி ஏத்தும்
  பாங்கிய தீவு நாளும்
காவலர் செய்த சூழ்ச்சி
  இரு இனம் மோதுதிங்கே
ஓவியம் சிதைதல் கண்டு
  ஒ வென அழுது நிற்பான்

சிங்களம் தமிழும் என்னும்
  சோதர் குருதி வெள்ளம்
கங்கைமா வலியாள் தாங்கி
  சங்கமம் ஆனாள் வங்கம்
வங்கமா கடலின் ஓசை
  எட்டய புரத்தி லார்ப்ப
பொங்கியே புலம்பி நொந்து
  பாரதி எழுந்து கொண்டால்

ஆயுதம் செய்யச் சொன்னேன்
  அலைநகர் அழியும் என்றா
நாயிலும் கேவலம் போல்
  நரபலி கொள்ளு தற்கா
ஆலைகள் செய்வம் என்றேன்
  சிலுவைகள் செய்யு தற்கா
காணிநிலம் வேண்டும் என்றேன்
  சுடுகாடாய் ஆகு தற்கா

சிங்களத் தீவினுக் கோர்
  பாலமே போட வேண்டாம்
சிங்களத் தமிழ் மனங்கள்
  இணைந்திடப் பாலம் வேண்டும்
திங்களைப் பாடி வைதேன்
  தீயினை சாடி வைதேன்
என்றுதான் மனம் புழுங்கி
  எழுதுவான் புரட்ச்சிப் பாடல்

மாதர்கள் பூ இழந்து
  மங்கல பொட் டிழந்து
மாதவப் புதல்வர் தம்மை
  பெற்றவர் தாம் இழந்தார்
சாதுவர் பலரும் வந்து
  சமரச மொழிகள் சொன்னார்
வேதமாய் சொன்ன வார்தை
  வேகுதே தீயில் மீண்டும்

பாரதப் போர் முடிக்கப்
  பங்கயக் கண்ணன் வந்தான்
பாரத அடிமை நீக்க
  புயலெனக் கவிதை சொன்ன
பாரதி இன்றி ருந்தால்
  போரிடும் இலங்கை மண்ணில்
பற்றிடும் தீ யணைப்பான்

வாரணம் பூட்டி வெள்ளித்
  தேரினில் உன்னை ஏற்றி
தோரணம் தொடுத்த வீதி
  தோறுநான் வலம் வருவேன்
பாரத இருள் அகற்ற
  சூரியக் கவிதை சொன்ன
பாரதி எழுந்து வாராய்
  ஈழப்போர் முடித்து வைக்க

இ.ம. ஜெகதீசன்குரூஸ்
மூதூர்

No comments:

Post a Comment