பொங்கலோ பொங்கல் என்று
போற்றிடும் பொங்கல் வருது
பொங்கலோ பொங்கல் என்று
பொங்கிப் படையல் இட்டு
பாங்காய்ப் பகலவனைப் போற்றி
பாடிடும் பொங்கல் வருது
மங்காத் தமிழர் நிலம்
மகிழ்ந்திடப் பொங்கல் வருது
செந்நெல் விழையுமிந்தச்
சேனையூர் மண்ணதனில்
அந்தநாள் ஞாபங்கள்
அலை போல ஓடி வருது
சிந்திடும் மாரி மழையின்
சினமெலாம் ஓயும் வேளை
வந்திடும் பொங்கலுக்காய்
வசதிகள் செய்ய நிற்பர்
வீடெல்லாம் தூசி தட்டி
வீண்பொருள் அகற்றி நல்ல
பொடிமஞ்சள் கரைத்த நீரால்
கழுவியே சுத்தம் செய்வார்
படமெல்லாம் துடைத்து வைத்து
பூசைப் பொருளையும் மினுக்கி
அடுக்களை கழுவி அம்மா
அயர்ச்சியில் சிறிது சாய்வாள்
வளவிலே முற்றி நிற்கும்
வாழையின் குலைகள் பார்த்து
அழகாக அப்பா வெட்டி
சீப்பாக்கிக் காய வைத்து
அளவோடு கிடங்கு வெட்டி
வைக்கோலால் காயை மூடி
அளவாக மூன்று புகையடிக்க
அழகாகப் பழுத்து விடும்
முந்தியே மூதூர் சென்று
சுண்டியே பானை வாங்கி
வந்திடும் பக்குவத்தை
யாவரும் அன்றறிவார்
வெற்றிலை பாக்கு அன்ன
பொருளெல்லாம் சேர்த்த பின்னர்
பற்றிடும் வெடியும் வாங்கி
வீட்டிலே வைத்திருப்பர்
மாட்டினை அவிழ்த்து வந்து
வண்டியில் பூட்டி பொழுது
பட்டபின் கடற்கரையை நோக்கி
ஊரது திரண்டு செல்லும்
கடகடவென்று சத்தம்
இரவெல்லாம் கேட்டு நிற்கும்
ஆடவர் தங்கள் வீட்டில்
கடற்கரை மண்ணைச் சேர்ப்பர்
தலைவாசல் முற்றம் தன்னில்
கடற்கரை மண்ணைப்பரப்பி
கலையாமல் தட்டி அமர்த்தி
மேடையும் போட்டு வைத்து
கலையம்சம் பொருந்த நல்ல
கோலத்தால் அலங்கரித்து
விலையாக நன்றி கூறி
சூரியப் பொங்கல் வைப்பர்
ஆடையில் வெள்ளை தேடி
மேடையில் விரித்துக் கொள்வர்
மடையினை வைத்துப் பின்னர்
பொங்கலும் படைத்திடுவர்
படைத்தவனைப் பணிந்து போற்றி
பகவலனைப் புகழ்ந்து தேடி
உடையவராய் வாழ்வதற்கு
குடும்பமே கூடி நிற்கும்
பூசைகள் முடிந்த பின்னர்
பொங்கலைபப் பகிர்ந்து உண்ண
பாசமாய் அம்மா வந்து
பந்தியின் நடுவே அமர்வார்
ஆசையாய்ப் பொங்கல் வாங்க
ஏழைகள் வந்து நிற்பர்
இலையோடு எழுந்து சென்று
எல்லோர்க்கும் பகிர்ந்தளிப்பார்
அன்றையப் பொங்கல் என்ன
இன்பமோ இன்பமடா
இன்றைக்கு என்ன பொங்கல்
இதிலென்ன இன்பமுண்டு
கடற்கரை மண்ணை ஏற்ற
வண்டியேதும் ஊரில் இல்லை
தேங்காய்ப் பால் எடுக்க
தென்னையும் வளவிலில்லை
No comments:
Post a Comment