Sunday, 5 December 2010

குடும்பம்

உலகம் தந்தான்  பல்வேறு
உயிர் தந்தான் விண்ணின்று
அலைவிலாது உயிர்கள் தம்மை
ஆண்டிடப் பணியில் ஆதாம்
மலரில் மணமுமாய்
எள்ளில் எண்ணையுமாய்
குலவியே வாழ  ஏவாள்
ஏற்றவள் உனக்கென்றீந்தான்

நாயகன் தலைவன் தன்னை
நலம் பலவுறவே காத்தல்
ஆயவன் கடமையென்று
அற்பணித்தமந்து வாழ்தல்
வேயொத்த மென்றோள் மாதர்
கடனெனவுணர்த்த தேவன்
நேயந்தங்கிட கிடந்த ஆதாம்
எலும்பெடுத்தவளை செய்தான்

தாதுரு சோலை தன்னில்
தகு மரக் கனிகளுண்டு
தீதுணர் மரம் தவிர்த்து
 சீருடன் வாழ வாழ்த்தி
ஓதுமத் தேவன் விண்ணில்
ஏகினன் அத்தினத்தே
ஓதிய குடும்ப வாழ்வின்
உயர்வினை உணர்த்தி சென்றான்

ஈசனுரைத்த வாக்கும்
இப்புவி தலைவன் வாக்கும்
வாசநாறோதியாளும்
விலக்கியே விளைத்தாள் பாவம்
பேசலாம் தகமைத்தில்லை
பேருலகெல்லாம் தோற்றாள்
ஆசையால் அச்சணத்தில்
அலகை செய் வஞ்சகத்தால்

நாதனதமாகாமை
நாட்யுரை கேளாமல்
மாதவளும் தான் தலமை
தாங்கியே இழந்தனள்காண்
போதவிழ்தார் பேதையரே
பேசுமொழியுண்டுமக்கு
வேதமுதல்வனவன் விதிமீறில்
வினையுண்டாகும்

இழந்தவையாவும் மீட்டு
எமை முன்னிருந்தவாறு
விழங்கிடச் செய்யவென்று
மேதினி மேவி யேசு
உழங்கிய பாவஞ்செற்று
உயிர் பெற்று உலகோர் உய்ய
துழங்கினார் குரிசில் அப்போ
தூறு செய்யலகை வீய்ந்த(து)


மக்களைப்ப் பெற்று மகிழ்வெய்தி
 மாண்புடன் கணவன்தனை மதித்து
தக்கதாம் செல்வம் அத்தனையும்
தரணியிற் பெற்று அறஞ்செய்து
மிக்கதாம் வேதநெறி வாழ்ந்து
வேதனவற்றாள் பணிந்து
திக்கெலாம் போற்ற பூமிதனில்
தினமும் மோட்சம் கண்டிடுவீர்


குடும்பம் தன்னில் குழந்தையாய்
உற்றுத்தேவன் குவலையத்தை
இடும்பைகள் காக்க வளிவகுத்து
எமக்குமதை வைத்தேகினான்
திடமுடனிதுவே தேவ வழி
என்பதையுணர்ந்து குடும்ம்பமதை
மடமகளளுடனே மாண்புறவே
நடத்திடிலதுவே மோட்ச வழி


-டி.ஜி.சோமசுந்தரம்.முன்னாள் அதிபர் சம்பூர் மகாவித்தியாலயம்

No comments:

Post a Comment