விண்ணப்பம்
புவிமீது போரோய்ந்து பூப்பூக்க வேண்டும்
பனி தூங்க இதழ்மீது முகம் பார்க்க வேண்டும்
நதியாக நானோடி விழையாட வேண்டும்
எதுவந்த போதிலும் இங்கு சுதந்திரமே வேண்டும்
இல்லார்க்கும் உள்ளார்க்கும் சமநீதி வேண்டும்
எல்லோரும் எல்லாமும் பெற்றாக வேண்டும்
கல்லான மனமிங்கு கரைந்தாக வேண்டும்
எந்நாடில் எனக்கிங்கு சுதந்திரமே வேண்டும்
புண்ணான நெஞ்சங்கள் பூவாக வேண்டும்
பொல்லாத இனவாதம் கலைந்தாக வேண்டும்
எந்நாட்டில் நானெங்கும் சென்றாக வேண்டும்
கண்ணான சுதந்திரமே எனக்கிங்கு வேண்டும்
செல்லோசை கேளாத தாய் நாடு வேண்டும்
எல்லோரும் ஓர் தாயின் சேயாக வேண்டும்
நல்லாரின் வழிதன்னை நான் பேண வேண்டும்
எந்நாளும் நிலையான சுதந்திரமே வேண்டும்
குலமாதர் செந்தூரம் கலையாமை வேண்டும்
நிலமகள் மேல் குண்டுமழை பொழியாமை வேண்டும்
நிலையான தீர்வொன்று மலர்ந்தாக வேண்டும்
விலையில்லா சுதந்திரத்தை சுவாசிக்க வேண்டும்
பொங்கு கடல் வளமிங்கு பொதுவாக வேண்டும்
எங்குமெவர் சென்றாலும் உயிர் வாழ வேண்டும்
தங்கு தடை இல்லாமல் நடமாட வேண்டும் \
வெம்பகையும் வெறும் பழியும் மடிந்தாக வேண்டும்
வெடிகுண்டு விழையாத ஒரு நாடு வேண்டும்
துடிதுடித்து உயிர்மாழா இன்பநிலை வேண்டும்
பொறிவெடிகள் புதயாத புதுப்பூமி வேண்டும்
கதிர் வீசிக் கலகலக்கும் பொன்வயலே வேண்டும்
சிறகொடிந்து வீழ்ந்தபுறா நலமாக வேண்டும்
மறுபடியும் இங்கு வந்து உயிர்காக்க வேண்டும்
வெறும் பேச்சும் பாசாங்கும் மறைந்தாக வேண்டும்
உறுதியுடன் நெஞ்சார ஒரு முடிவு வேண்டும்
எந்நாட்டில் எதிர்காலம்பொன்னாக வேண்டும்
நந்தவனம் பூப்பூத்து தேன் பாய வேண்டும்
கொஞ்சும் மொழிக்கிள்ளைகளின் மொழிகேட்க வேண்டும்
அஞ்சி அஞ்சி வாழ்ந்தகாலம் கலைந்தாக வேண்டும்
அகதியெனும் வார்த்தையினை அழித்தாக வேண்டும்
சகலருக்கும் நல்வாழ்வு கைகூடவேண்டும்
சகவாழ்வு சாந்தி நிதம் உதித்தாக வேண்டும்
பகைமறந்து நான் வாழ சுதந்திரமே வேண்டும்
மண்ணுண்ட கன்னிவெடி செயல்மாய வேண்டும்
வண்டாடும் பூந்தோட்டம் போலாக வேண்டும்
விண்முட்ட புகழ் பூத்து மேலோங்க வேண்டும்
பொன்னான சுதந்திரமே எனக்கிங்கு வேண்டும்இ.ம. ஜெகதீசன்குரூஸ்
மூதூர்
No comments:
Post a Comment