மரபுக்கவிதை என்னும்
தாழிடப்பட்ட கோட்டைக்குள்
அடைபட்டுக் கிடந்த
எனது பேனாவை
புதுக்கவிதை என்னும்
புல்வெளியில் மேயவிட்ட சுனாமியே
என் நந்தவனத்தின்
உயிர்ப் பூக்களை
உறிங்சிக் குடித்த பேரலையே
என் தேசத்தின் சோகத்தில்
தொட்டெழுதும் கவிதை இது
என் உடன் பிறப்புக்களே
உங்களது கல்லறைகள் மேல்தான்
எனது புதுக்கவிதை விலாசம்
எழுதப்படவேண்டும் என்றால்
உங்கள் மரணங்கள்
என் கன்னி புதுக்கவிதைக்கு
வரவேற்புரை வழங்கட்டும்
ஓ இந்துமா சமுத்திரமே
உன் நித்திலத்தீவின் ரெத்தக்கறை கழுவி
யுத்தம் முடிக்க வந்தாயோ
என் சிங்கார வனத்தை
சங்காரம் செய்த அழிவுப் பேரலையே
உன் கரைப்புறம் ஒரு கணம் வற்றியதால்
எனது துறைமுகம் பிண முகமானது
என் சுந்தரப்பூமியை
துவம்சம் செய்த சுனாமியே
தீயினால் வெந்த நித்திலத்தீவு
நீரினால் தணியுமென்றா நீ சீறி எழுந்தாய்
தீ பட்ட வடு மாறுமுன்னே
உன் நாப்பட்டு நாசமானது
ஓ வங்கக் கடலலையே
துடுப்பென்னும் ஏரால் உனை
உழுது வலை என்னும் விதை தூவி
மீன்களை அறுவடை செய்யும்
என் கடல் உழவர்கள்
உன் முதுகில் உழுத வலியால்
அழுது ஆர்ப்பரித்து எழுந்தாயோ
பெளர்னமி கண்டு பொங்கும் கடலே
மாதர் முகம் கண்டு பொங்கினாயோ
மழலைகள் வதனம் கண்டு சீறினாயோ
பிஞ்சுகளின் மரண ஓலம்
வானைப்பிளந்து ஆண்டவன்
சன்நிதி மட்டும் ஒலித்திருக்குமே
நீலக் கடலலையே
நெஞ்சுக்குள் நெரிஞ்சுகளை
அள்ளி விதைத்தாயோ
சுனாமியே
மகாவம்சம் சேமித்து வைத்த
நினைவுப் பதிவுகள் சொல்கின்றன
அன்றொருனாள் கிறிஸ்த்து பிறப்பதற்கு
இரண்டயிரத்தி இருனூறு
ஆண்டுகள் முன்னே
ஆடிய ஊழிக்கூத்தில் இரத்தின துவீபம்
சித்தம் கலங்கி சிதைந்து போனதாம்
ராசவளியாவும் ரகசியமாய்
காதுக்குள் ஓதியது
உன் அட்டகாசங்களையும்
அடாவடித்தன்ங்களையும்
இன்று
கிறிஸ்து பிறந்த மறுநாள்
குண்டுகள் போட்டு குற்றுயிராய் கிடக்கும்
மரகத்தீவில் பத்தாயிரம் அணுகுண்டுகளை
அள்ளி விதைத்தாயே
நியாயமாகுமா
மறைமுகமாய் வந்து எங்கள்
துறை முகத்தில் வெடித்த சுனாமியே
கறை படியா பிஞ்சுகள்
செய்த பாவம் என்ன
பூக்கோலம் போட்ட மண்ணில்
நீர்க்கோலம் போட்டு மாதர்
பூக்கோலம் அழித்து கலிங்கத்துப்
போர்க்கோலம் போட்டாயே
பிஞ்சுகள் அஞ்சியழ
வஞ்சியர் வெம்பியழ
மிஞ்சிய உயிர்களெல்லாம்
உறவினை சொல்லியழ
கஞ்சியுமின்றி கதறியழ
ஐயையோ வேகுதே நெஞ்சமெல்லாம்
நீ வார்த்த நீரால்
காவலுக்குத் தூது சென்ற கடல்லையே
நீ காலவனுக்குத் தூது வந்த நியாயமென்ன
ஈரமான அலையே
ஈரமில்லா இதயம் உனக்கு
மறக்க முடியுமா
அந்த தொண்ணூற்றி மூன்றை
தை இருபத்தைந்து தையல் ஊசி இன்றியே
இதயத்தைத் தைத்த நாள்
திருமலை மூதூர் கடற்பரப்பில்
நீ நடத்திய மாபெரும் கடற்கொள்ளை
மூதூர் முத்துக்களைச் சுமந்து வந்த
மரக்கலத்தை வழிமறித்துக் கொள்ளையடித்தாயே
அந்தோ மீண்டும் சுனாமி வடிவத்தில்
இயற்கையே வெந்த புன்னில்
வேல் பாய்ச்சி வேடிக்கையா
வாயுத்தேரேறி வருவாய் என்று
தொலைக்காட்சியும் வானொலியும்
போட்டி போட்டு எதிர்வு கூறின
மரங்களெல்லாம் மொட்டையடித்துக்கொண்டு
வீதியோரங்களெல்லாம் உன் வரவுக்கு
பச்சைக்கம்பளம் விரித்தன
எதிர்வு எதிர் மறையானது
அதிர்வினால் உதிர்ந்து விட்டோம்
அரசியல் வாதிகள் போல்
ரகசியமாய் மின்னாமல் முழங்காமல்
சுனாமித் தேரேரி வந்து
துவம்சம் செய்தாயே
துரோகத்தின் உச்ச கட்டமல்லவா இது
தாகம் தீர்க்கத்தானே தண்ணீர் கேட்டோம்
உன் வேகத்தைக் காட்டவா
நீ ஆடிய தாண்டவம்
அரங்கேறிய பின்புதான்
தொலைக்காட்சியில் உன் தொல்லைக்காட்சிகள்
நீ பூமிக்குள் இருந்து புறப்பட்டு வருகிறாயா என்று
அறிவில்லா விலங்குகள்
நமஸ்காரம் செய்யாமல் உன்னை
பகிஸ்காரம் செய்தனவாம்
அடடா மானிடனே உன்னயே புகழ்ந்து
சுய புராணம் பாடிப் பாடி
உச்சாணிக்கொம்பில் கொழுவீற்றிருக்கும்
உன்னை விட ஐந்தறிவு விலங்குகள்
பெரிய விலங்குகளல்லவா
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகிறது
ஓ பாரதி சொன்ன யுத்தம் இதுதானோ
பூமிக்குப் பிடித்த புற்று நோய் வெடித்து
கூற்றுவனை ஏற்றி வந்த சுனாமியே
வடக்கு கிழக்கு என்ற
முடக்கு வாதம் உனக்கு இல்லை
தெற்கு மேற்கு என்ற
திமிர் வாத நோயுமில்லை
உனக்கு மொழியில்லை மதமில்லை
இனமில்லை உயர்வில்லை தாழ்வில்லை
சிங்களத்தீவுக்கோர் பாலம்
போடச் சொன்னவன் பாரதி
நீயோ உறிஞ்சிக்குடித்த உயிகளால்
மனங்களை இணைக்க பாலம் போட்டாய்
மரித்துப்போன மனிதத்திற்கு
மறுவாழ்வு கொடுத்தவன் நீ
மரத்துப்போன மானிட உள்ளங்களுக்கு
ஒத்தடம் கொடுத்து உண்ர்வு கொடுத்த
வெற்றி உனக்கே
உறங்கு நிலையில் கிடந்த
மனிதப் பண்பை உரசிப்பார்த்து
முளைக்கச் செய்தது நீ
மயங்கிக் கிடந்த மனித நேயத்திற்கு
சேலேன் பாய்ச்சி உயிர் பிச்சை கொடுத்த
பெருமை உனக்கு
விடாக்கண்டனையும் கொடாக்கண்டனையும்
கைகுலுக்க வைத்த பெருமை உனது
நீன் உடைத்தது வீடுகளை மட்டுமல்ல
அரசியல் தடைகளை ஆதிக்கப் படைகளை
பிரிவுச் சுவர்களை
பூமியே உனக்கு
ஒன்பது தசம் ரிச்டர் காய்ச்சல் கண்டதால்
சுமத்திரா கடலின் அடிவயிற்றில் உராய்வு
அதனால் உலகத்தின் முகத்தில் சிராய்ப்பு
ஆழிப்பேரலையே
உனது வேகம் இதுவென்றால்
எமது நொருங்கிப்போன நெஞ்சில் மோதும்
அலைகளின் வேகம்
அதை அளப்பது எந்தக்கருவியால்
எந்த அலகினால்
சுனாமியே
நீ ஓய்ந்து விட்டாய்
ஆனால் நீ விட்டுச் சென்ற அதிர்வலைகள்
அவை நெஞ்சின் அலைகள்
என்றும் ஓயாத அலைகள்
அவை நெஞ்சில் மோதி மோதி
நீ அழித்த ஆத்மாக்களின் ராகங்களைப்
பாடிக்கொண்டே இருக்கும்இ.ம. ஜெகதீசன்குரூஸ்
மூதூர்
No comments:
Post a Comment