Sunday, 28 November 2010

அது ஒரு கனாக் காலம்

by Amal Raj on 20 நவம்பர் 2010, 08:50 க்கு

தேவனால் 
தெரிவு செய்யப்பட்ட 
பூமியின் புதல்வர்கள்
நாங்கள். 

அதனால்தான்
இஸ்ரவேலரைப்  போல்
அடிக்கடி இடம் பெயர்கின்றோம்.

ஆனாலும்
சிதறிய இடத்திலெல்லாம்
ஒளிரும் நட்சத்திரங்கள்
நாங்கள் .

யூத மரத்தைப் போல்
வேற்றிடங்களில் 
கிளை பரப்பி 
வேரூன்றியிருந்தாலும் 
எம்
முன்னோர்களின் பட்டியலை 
முன்னகர்த்திப் பார்த்தால் 
விஞ்சுவது 
ஓர் உயிர்த்துளி மட்டுமே.
அபிரகாமுடயதைப்  போல.

மரண வீட்டிற்கும்
மண வீட்டிற்கும்
ஆயிரம் அர்த்தங்கள்
இங்குதான் கற்க வேண்டும்.

மரணத்திற்கு
மைக் செட்டில் 
துக்கம் வெளியிடும்
கலாச்சாரம் இன்னுமில்லை. 

அந்த உரிமைக் கஞ்சியின்
அர்த்தங்களை
இங்கு
சோடா போத்தல்களால் 
சொல்ல முடிவதில்லை.

அங்கு
மனவறையின் திசையை 
கூலிக்கு பிடித்தவன் 
கூறுவதில்லை.

பந்திக்கு உணவு
எங்கள் பட்டாளம்தான் 
பம்பலாய் செய்து முடிக்கும். 
இங்கு
எமக்கு சம்மந்தமில்லாத
எவனோ ஒருவன்
எமது
உப்பையும் புளியையும்
தீர்மானிக்கிறான்.

இப்படியெல்லாம்
கலை, கலாச்சார திமிரோடு
வாழ்ந்த நாங்கள்
கடந்த கால நினைவுகளை
சுவாசித்துக் கொண்டு
எங்கோ ஒரு
நகரத்தின் தூசியில்
கலந்து கொண்டு
கரைந்து கொண்டிருக்கிறோம்
என்பதுதான் நிஜம்.

அமல்ராஜ்  
மூதூர்

No comments:

Post a Comment