மௌனம் காக்கிறேன்
களப்பலி கொண்ட கிராமம்
கண்முன்னே கொள்ளை போகிறது
கண்களை இறுக்கி மூடியபடியே
மௌனம் காக்கிறேன் நான்
காளிதேவியின் கனவுக் கூடாரம்
கலைந்த படியே கிடக்கிறது
வீணைநரம்புகள் விம்மியபடியே
நெற்றிப் புருவங்கள் சுழிக்கின்றன
பால் நிலவு அங்கு எறிப்பதில்லை
காலடி விளக்குகள் ஒளிர்வதில்லை
சதங்கையின் சங்கீதம் பிறப்பதில்லை
குந்தியிருந்த படியே
காற்றிலே கரைந்து போகிறேன்
வாழ்விடம் முழுவதும் வலிய இருள்
நெஞ்சங்கள் நிறைந்த கீறல்கள்
கட்டிக் கொண்ட புண்களாய்
இதயங்கள் கொதிப்படையும்
தாமரைக் குளக்காற்றோ
சுட்டெரிக்கும் சூரியனாய்;
மண்ணில் பட்டு மரத்துப்போகும்
கால் நடைகளின் கண்களில்
காய்ந்து போன கண்ணீர்த்துளிகள்
சொந்தங்களைத் தேடியதனால்
சோர்ந்து போன நடைப்பவனி
இரைந்து கொண்டிருந்த கடல்
மௌனம்காத்து அடங்கிப் போகிறது
மீண்டும் ஒரு சுனாமிக்காய்
மண்ணின் மதிப்பு
எங்கள் மண்ணிற்கு மதிப்பு
பல பில்லியன்கள்
ஐவகை நிலங்களும் அடங்கிய
ஒற்றை நிலம் என்பதால்
மாசற்ற குழந்தையின்
காற்று வழிக்கிராமம்
பல்தேச மொழியாளர்களின்
இலட்சியக்கிராமம்
சம்பூரணமாய் அமைந்து
கலையும் கூத்தும் நிறைந்த கிராமம்
தலையிழந்த தென்னைகளும்
சஞ்சாரமில்லாத பாதைகளும்
இருட்டே ஆட்சி செய்யும்
இடிந்து போன கோபுரமும்
நிறைந்த கிராமம்
குளக்கோட்ட மன்னனின்
வம்சக் குடிகள்
வாழ்விழந்த மனைகள்
சிதைந்த கிராமம்
கனவுகள் என்றும் ஏக்கங்களாய்
நிறைவேறாத ஆசைகள்
நொடிக்குநொடியாய்
கலைந்து போகும் கிராமம்
மண்ணில் கொப்புளங்களாய்
மாறாத காயங்கள்
குருதிவடிந்த படியே இருக்கும்
உரிமைகளை இழந்து
உணர்வுகளைத் தேடும் கிராமம்
க. யோகானந்தம்
சம்பூர்
No comments:
Post a Comment