Thursday, 14 October 2010

மதுவும் மாதுவும்

மதுவும் மாதுவும்
மங்கையும் மதுவுமொன்று
மயக்கிடும் தன்மை தன்னில்
பங்கயத்தமரும் பிரம்மன்
பாங்கியும் அமர்ந்தாள் பக்கம்.

திங்களைச் சூடுமெங்கள்
சிவனது உமையுங்கூட
பங்கெனப் பாதிபெற்றால்
பாதியைக் கொடுத்தாரென்றும்.

போதைதான் இரண்டுமென்றால்
புனிதமும் உண்டு அங்கு
பார்த்திட்டால் போன ஒன்று
பருகிட்டால் போதை மற்று.

சாதனை போதைக்குண்டு
சரித்திரம் பலவுமுண்டு
ஆட்சிகள் உயர்ந்ததுண்டு
அனேகமாம் சரிந்ததுண்டு.

போதையைத் தேடி அன்று
போயினர் சங்ககாலம்
பேதையைத் தேடிச்சென்று
பெற்றிட்ட வரலாறுண்டு.

மாதவி போதையாலே
மயங்கினான் கோவலன்தான்
காவியங் கண்டோமின்று
கண்ணகி சிலம்பினாலே.

விரும்பிய பெண்டீர் போனால்
விருப்போடு தாடி மீசை
பருகிடும் பழைய கள்ளு
பலர் பெயரோ ‘தேவதாசு’

சாதனை படைக்குந் தன்மை
தரணியில் போதைக்குண்டு
வேதனை பலவுமுண்டு
வீதியில் அலைவதுண்டு.

கோலங்கள் மாற்றுஞ் சக்தி
குவலயத் திருப்பதெல்லாம்
மங்கைக்கு முண்டு கண்டீர்
மதுவுக்கு முண்டு உண்மை.

- சேனையூர்.இரா.இரத்தினசிங்கம் -
2010.10.11

No comments:

Post a Comment