காதல் இறந்த உலகம்
இரவு பகலாய்
என்னை
ஒப்பாரி வைக்கச் சொல்
கவலைகளில் மூழ்கச் சொல்
கோபம் தலைக்கேற
உடம்பைக் கத்தியால் கீறி தணிக்கச் சொல்……..
நான் உயிரோடு இருத்தலை
உறுதி செய்ய பயத்தில்
மூச்சிரைக்க மூச்சிரைக்க
நாக்கு இழுபட ஓடச்சொல்
அலுக்காமல் களைக்காமல்
ஓடியோடி உயிரின் இருத்தலை
காக்க முடியும் என்னால்….
இவைகளே! இவைகளே!
எனக்குப் பழக்கப் பட்டவை…
காலும் கையும்
மூட்டு மூட்டாய்க் கழன்று விழுந்தாலும்
நாளைக்காய் ஊர்ந்து
ஊர்ந்து உயிர் வாழ்வேன்….
ஒன்றென்ன
ஆயிரம் பிணங்கள்
வீதியில் கிடந்தாலும் மாரடிப்பேன்
கால் விரலால்
நிலம் கிண்டிப் பிணம் புதைப்பேன்
அகதி முகாமாய் இருந்தாலென்ன
புழுத்த அரிசியாய் இருந்தாலென்ன
என்
பசித்தலிலும் புசித்தலிலும் மாற்றமில்லை……
இவைகளே
என் வாழ்வின் நிகழ்கால அனுபவங்கள்
தயவு செய்து என்னை
காதலிக்கச் சொல்லாதே….
உன் காதல் மொழி பற்றிய
அறிதலோ புரிதலோ
என்னிடம்
இல்லாதவரை நிர்ப்பந்திக்காதே………!
இரு புறமும் நெருப்பு எரிய
நடுவில்
உயிர் வழிந்து கிடக்கும்
கட்டெறும்புக்கு காதல் ஒரு கேடா…?
பூனையின் கால்களில்
சிக்கிய சுண்டெலிக்குக் காதல்
வருமெனில்
எனக்கும்…..எனக்கும்…..
மாடு மிதித்த கோரைப் புல்லுக்கு
காதல் வருமெனில்
எனக்கும் ……எனக்கும்…….
உனது காதல்
உனதும் எனதும் வாழ்தலை
உறுதிப்படுத்துமெனில்
நம்
தொன்மைத்தைத் தூக்கித் தருமெனில்
அதுபற்றிச் சிந்திக்கலாம்….
சத்தமும் ரத்தமும்
இல்லையென்றாகி
நான் சிந்திக்க…….
சிரிக்க…
கற்பனை செய்ய……
கவலைப்பட……..
கவிதை எழுத…
எனக்குநீதான்…நீ மட்டுந்தான்……
என்றான பின்
உன்
காதல் மொழியில் பேசு என்னிடம்
அதன் பின்…..
அது பற்றிக் கதைப்போம் நானும் நீயும்…
No comments:
Post a Comment