சாம்பல்பூத்த தணற்காயங்கள்
மரணத்தின் பிடியில் நின்று
பேசப்படுகின்ற
மாற்றுக் கருத்துக்கள்.
சில சுடலை ஞானங்களுங் கூட.
சவங்களுக்கு மட்டுமே புரிதலான
பாஷையில் பேசப்படுகின்ற
மரண சாசனங்கள்.
ஏனெனில்
மறுக்கப்படாதவை இதுவரை எஞ்சவில்லை.
சில உண்மைகளுங் கூட.
பேறு காலநேரம் குறுகலானபோது
கற்பிணியைக் காவிச் சென்று
நடு வழியில்
உயிருக்கான உத்தரவாதம் மறுக்கப்பட
வெற்றுக் கோதுகளை மட்டும்
வேறு மருத்துவமனையில் கொட்டிவிடும்
முதலுதவி வண்டிகளில்
வெளியேறி விலகாமல் உலவும்
உயிரின் வாடை.
எனக்காக என் கைச்சிறைக்குள்
தாலியால் கட்டுண்டுபோகும் பெண்,
கூந்தலில் இன்னும் விலகாமல்
இறுக்கமாய்
என்னைவிடவும் நெருக்கமாய்
ஒட்டியிருக்கும் அவளது
காதலன் சூட்டிவிட்ட கலியாணப் பரிசு.
காதலின் அஸ்தமனத்தில்
மௌனமாய் விலகும்
அவளுக்கு மட்டும் சுடும்
பெரு மூச்சு.
விடுதலை வேண்டி வீதியிறங்கியபோது
நாடு இல்லையென்றானது.
நாட்டில் நல்லாட்சி நடக்கின்றதாம் இப்போது
எமக்கு
வீடுகூட இல்லை
இதை
வெளியில் சொல்ல முடியவில்லை.
சுந்தரமூர்த்தி நாயனார்
சுவையான புராணம்
சோர்விலாத பெருங்கதை.
சிவனால் தடுக்கப்பட்டதும்,
ஆட்கொண்டு அடிமைகொண்டதும்,
அவன் விரும்பியபடியே
பரவையும், சங்கிலியும் சதிகளானதும்,
மணவறைவரை ஏறி
மங்கலமாய் அணிபூண்டு
தனித்துவிடப்பட்ட மணப்பெண்ணின்
மரணிக்கும் வாழ்க்கையின் ஓலத்தில்
அத்திவாரமிடப்பட்டமை,
அனைவரும் அறிந்தகதை.
மணப் பெண்ணின்நிலை?
சிவனே……… வா…!
வந்து ஒரு பதில்சொல்.
சாமி ஆடும்
சாட்டை வாங்கும் என்
சஞ்சலம் போக்கும்
கட்டுச் சொல்லும்
என்றெல்லாம்
உனக்கு நம்பிக்கையில்லையோ
என்னவோ…
வீட்டிலே சாமிப்படிக்கட்டில்
சாராயத்துடன் காத்திருந்த
என் முன்னே
சவமாய் விழுந்து படுகளங்கிடக்கும்
மாரியம்மா
உனக்கும் நியாயங்கள்
மறுக்கப்பட்டனவா?
புதைக்கப்பட்ட எங்களின்
நிலையான பூர்வீகம்போல.
ஒருமுறை போனேன்
வீகோவும் பரசிடமோலும்
இருமுறைபோனேன்
விற்றமின் சீயும் பரசிடமோலும்
மூன்று நான்கு
நான்கு ஐந்து
எப்போதும் எவ்வேளையும்
அதேதான்…
மாறாத என்
மாற்றப்படாத
வயிற்றுவலி மெல்ல உயிர்க்கிறது.
மறுக்கப்பட்டது
வலியின் ரணமா?
மருந்தின் குணமா?
அவன் அவளுக்குக் கொடுத்து
நிராகரிக்கப்பட்டதால்
அடிக்காமல் அவனே அவனை
அறைந்துகொண்ட
முதல் காதல் மடல்.
வயதுண்டு வளர்த்தி உண்டு
உணர்வு கொண்டது தவறா?
நெஞ்சில் காதல் முளைத்தது தவறா?
தோல்வியில் அவனும்,
வெற்றியில் அவளும்
காதலில் நிராகரிக்கப்பட்டது
நியாயம் ஒன்றுதான்.
சிலுவை சுமந்த பரிசு
அறையப்பட்ட ஆணிகள்.
அவர்களால் ஏவப்பட்ட
எறிகணைகளைச் சுமந்து
எரிந்தும் எரியாமல் நிறம் மாறி
உடல் சுமந்து வந்த பரிசு
உச்சி மண்டையில்
நச்சென்று மாட்டிய
ஒன்பது அங்குல வில்லுக் கத்தியா?
அல்லது
ஓரங்கள் விலக்கி உயிருடன் தசைப் பிண்டத்தில்
ஒழித்து விளையாடிய கொல்லும் கத்திகளா?
இத்துடன் முடிந்ததா?
நிலந்தோண்டி நீர் புசித்திட
நகம் பிறாண்டி நாக்கால் நக்கி
உறுஞ்சியும் ஒன்றும்வாராமல்
கிடக்க
முதுகிலே அனலேற்றி
மின் நிலையம் கட்டவாம்.
பிறவிக் குருடரை
கண்டபடி விழியென்றனர்.
காணாததைச் சொல்லென்றனர்.
இப்போ
பார்வையை மறைக்கவும்
இமைகளை மூடென்கிறார்,
இருட்டிலே கிட என்கிறார்.
ரணவலி தெரியுமா?
சாம்பல் பூத்த தணற் காயத்தில்
ஆணிகள் மாட்டிய
அந்த வலி புரியுமா?
நாம் பட்டோம்.
தமிழர் நாம் பட்டோம்.
அடி அடி அடி அடி
ஆணி அடி
ஏணிவைத்தேறி
பிடரி மயிர் பிடித்து
ஐந்து அங்குலம் என்ன
ஆழுயரத்தாணி கொண்டடி.
அந்த
அவுஸ்திரேலியாவும்
ஆரியவதியும்போல.
அப்போதுதான் புரியும்
சாம்பல் பூத்த தணற்காயத்தில்
ஆணி மாட்டிய அந்த வலி.
கட்டைபறிச்சான்
மதுரன்
2010-10-1
No comments:
Post a Comment