Friday, 1 October 2010

உயிரோடு உலாவும் சமாதிகள்

உயிரோடு உலாவும் சமாதிகள்


இறந்து போனவர்களின் சாட்சிகளாய்
பரந்து கிடக்கும் சமாதிகளோடு சமாதிகளாக
வெயிலை உறிஞ்சும்
எங்கள் வெண்ணிறக் கூடாரங்களும்
விரிகின்றன…….!

இன்று
சுடலைகளெல்லாம்
தற்காலிக முகாம்கள்
என்ற பெயர்ப் பலகைகளுடன்………
முற்றும் இழந்திருப்பதால்
அவர்களுக்கு
நாங்களும் ஒரு வகையில் பிணங்கள்தான் போலும்….!

எங்களின்
வெண்ணிறக் கூடாரங்களும்
சமாதிகள்தான்
சத்தமில்லாமலேஅடக்கம் செய்யப்பட்டிருக்கிறேமாம்

பக்கத்தில் புதையுண்ட பிணங்கள்
விழித்துக் கொள்வதில்லை…...
கவலை கொள்வதில்லை
நாங்களோ…!
நிறுவனங்களின்
கொடியேந்தியவாகனங்களைக் கண்டால்…..
அதிகாரிகளைக் கண்டால்….
நிவாரணம் என்றால்….
விழித்துக் கொள்கிறோம்.

இவ்வவுதான்
மற்றப்படி
சமாதிப் பிணங்களுக்கும்
எங்களுக்கும்
பெரிதாக ஒன்றும் வேறுபாடிருப்பதாய்
எம்மால்உணர முடியவில்லை

சஜந்தன்

No comments:

Post a Comment