Friday, 10 September 2010

அகவை 75 கண்ட தாமரைத்தீவான் - எஸ்.ஆர்.தனபாலசிங்கம் -



சோமநாதர் இராசேத்திரம் எனும் இயற்பெயர் கொண்ட கவிஞர் தாமரைத்தீவான் 1932.07.24 இல் `தாமரைவில்' எனும் ஊரில் பிறந்தவர்சோமநாதர் இராசேத்திரம் எனும் இயற்பெயர் கொண்ட கவிஞர் தாமரைத்தீவான் 1932.07.24 இல் `தாமரைவில்' எனும் ஊரில் பிறந்தவர். இதனால், பிறந்த ஊரின் முற்பாதியினையும் வளர்ந்த ஊரான ஈச்சந்தீவின் பிற்பாதியினையும் இணைத்து தாமரைத்தீவான் என்ற புனைபெயரை வரித்துக் கொண்டார்.
மாணவப் பருவத்திலேயே கவிதை எழுதுவதில் வல்லவரான இவர் 1955இல் ஆசிரியரானார். 1956 இல் சுதந்திரன் பத்திரிகையில் முதலாவது கவிதை பிரசுரமானதைத் தொடர்ந்து வீரகேசரி, தினகரன், சிந்தாமணி முதலிய பத்திரிகைகளிலும் சுடர், தமிழ் உலகம், சர்வதேச தமிழர் முதலிய சஞ்சிகைகளிலும் எழுதினார்.

எழுதியதோடு மட்டுமன்றி, திருமலை மாவட்டத்தில் பல கவியரங்குகளில் கவிதை பாடி சிறந்த கவியரங்கக் கவிஞராகவும் அறியப்பட்டார். இவரது கவிதைகள் சிறந்த ஓசைநயமும், உணர்ச்சி வெளிப்பாடும் தமிழ் உணர்வும் சமூக சீர்திருத்தக் கருத்துகளும் கொண்டவையாக அமைகின்றன. அத்தோடு, தற்காலத்தில் தமிழர் படும் அவலநிலையைச் சித்திரிப்பனவாகவும் உள்ளன.

"போரின் நிகழ்வுகளும் மக்கள் அனுபவிக்கின்ற இன்ப - துன்பங்களும் மிகச்சிறப்பாக கவிதைகளில் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளன. புரட்சிகரச் சிந்தனைகளுடன் எழுதுவதில் தாமரைத் தீவான் வல்லவர்" என `போரும் பெயர்வும்' எனும் நூலின் அணிந்துரையில் எஸ்.எதிர்மன்னசிங்கம் குறிப்பிடுவது நோக்கத்தக்கது.

போரும் பெயர்வும், கீறல்கள், பிள்ளைமொழி, சிறுவிருந்து முதலிய பல கவிதை நூல்களோடு கட்டுரைப் பத்து, உணர்ந்தேன் உரைத்தேன் போன்ற கட்டுரை நூல்கள், உட்பட இவரது பதின்மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன. வெளிவராது கையெழுத்துப் பிரதிகளாய் இருப்பவை பல.

`கீறல்கள்' என்ற இவரது கவிதைநூல் வடக்கு,கிழக்கு மாகாண கவிதை இலக்கியத்துக்கான சாகித்திய மண்டலப் பரிசை 2001இல் பெற்றுக் கொண்டது. மேலும், மணிபல்லவம், கலாபூஷணம் ஆகிய விருதுகளையும் இவர் பெற்றுக் கொண்டார். அத்தோடு, குறளமுதம், தாகம் சஞ்சிகைகளின் பாராட்டுதல்களையும் பெற்றுக் கொண்டார்.

எவ்வித ஆரவாரமுமின்றி கவிதையினூடாக சமூக சீர்திருத்தக் கருத்துகளை முன்னெடுத்துச் செல்லும் கவிஞர் தாமரைத்தீவான் அகவை 75இல் காலடி எடுத்து வைத்ததை முன்னிட்டு இன்னும் பல்லாண்டு வாழ்ந்து அவர்தம் பணி தொடர நாம் அனைவரும் வாழ்த்துவோமாக.

No comments:

Post a Comment